பொதுவாக சினிமா என்பதே காதில் பூச் சுற்றும் விசயம்தான். இந்தப் படத்தில் பூப்பந்தையே.. இல்லையில்லை பூ மார்க்கெட்டையே சுற்றுகிறார்கள்.

சி.பி.ஐ அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்றும் தம்பி ராமையாவுக்கு தனது மகன் சூர்யாவை தனது துறையிலேயே.. அதாவது சி.பி.ஐ.யிலேயே அதிகாரியாக்க வேண்டும் என்பது கனவு. சூர்யாவும் அதற்கான தகுதிகளோடு, நேரடித் தேர்வுக்குச் செல்கிறார். அங்கு வில்லன் அதிகாரி சதி செய்து சூர்யாவுக்கு வேலை கிடைக்காமல் செய்துவிடுகிறார். இதற்கிடையே, சூர்யாவின் நண்பர் கலையரசன், காவல்துறை அதிகாரி ஆகும் லட்சிய  வெறியில் இருக்கிறார். ஆனால்  அங்கு லஞ்சம் கேட்கப்பட.. கொடுக்க முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறார்.

இதனால் மனம் வெறுத்தப்போன சூர்யா…  லஞ்சத்தை லஞ்சத்தால் ஒழிக்க திட்டமிடுகிறார்.  அதாவது சிபிஐ அதிகாரிகள் என்று சொல்லி சூர்யா தலைமையிலான ரம்யாகிருஷ்ணன், சத்தியன், செந்தில் உள்ளிட்டோர் அரசியல்வாதிகள் வீடுகளில் “ரெய்டு” செய்து பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்.

டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட தேர்வாணைய குழுவினரை கடத்தி வாந்து அந்த பணத்தைக் கொடுத்து, “லஞ்சம் வாங்காமல் சரியான நபர்களை தேர்ந்தெடுங்கள். அதற்குத்தான் உங்களுக்கு இந்த லஞ்சம்” என்கிறார்கள்.

பூ மார்க்கெட் என்பது சரியாகிவிட்டதா?

சி.பி.ஐ. என்று பொய் சொல்லி (நிஜ) போலீசை பாதுகாப்புக்கு அழைப்பது, சி.பி.ஐ.யில் வேலை என்று வெளிப்டையாக விளம்பரம் கொடுப்பது, அதை நம்பி வருபவர்களுக்கு  மறுநாள் முதல் வேலை என்று சொல்ல அவர்களும் நம்புவது…

கதை விவாதத்தின் போது சிந்திக்கவே மாட்டார்களா என்று தோன்றுகிறது.

 

ஆனால், பெரும் வெற்றி பெற்ற “ஸ்பெஷல் 26’ என்ற   இந்திப்படத்தின் ரீமேக்காம் இது. அந்தப் படத்தைப் பார்க்கும்போது சிந்திக்கவே மாட்டார்களா என்று மாற்றிக் கேட்கத் தோன்றுகிறது.

சூர்யா வழக்கம்போல இயல்பான நடிப்பு. ஆனால், இரட்டை அர்த்த வசனம், ஆபாச சைகைகள் என அதிர்ச்சி அளிக்கிறார் சூர்யா.

கண்ணியவான் சூர்யாவுக்கு என்ன ஆனது?

மற்றபடி வழக்கம்போல கச்சிதமான நடிப்பு. சி.பி.ஐ. பணி கிடைக்காதபோது குமுறுவதாகட்டும், பிறகு அகால்ஜூகாலம் திட்டம்போட்டு அதிரடியைக களம் இறங்குவதாகட்டும், கீர்த்தியை லவ்வுவதாகட்டும்.. ஜமாய்க்கிறார் சூர்யா.

கீர்த்தி சுரேஷம் அசத்தியிருக்கிறார். வழக்கமாக டூயட் பாடும் ஹீரோயினாக மட்டும் இல்லாமல், மனதில் நிற்கும் கதாபாத்திரம். அவரும் உணர்ந்து நடித்திருக்கறார். அதுவும் சூர்யாவுடன் சரிக்கு சரி பேசி பஞ்ச் கொடுக்கிறார். இவருக்கு இன்னும் அதிக வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.

அதே போல ரம்யா கிருஷ்ணனின் நடிப்பும் சிறப்பு.  நீண்ட நாட்களுக்குப் பிறகு கார்த்திக். அதே துள்ளல். அதிரடி நடிப்பு.

நகைச்சுவைக் காட்சிகள் ஓகேதான். ஆனால் ஆபாச நெடியைத் தவிர்த்திருக்கலாம். குறிப்பாக சத்யன் வரும் காட்சிகள்.

ஆனந்த்ராஜ், தம்பி ராமையா, கலையரசன் என்று அனைவரும் தங்கள் பங்கை கச்சிதமாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் அசத்தியிருக்கிறார். குறிப்பாக 1980களை கண் முன் நிறுத்துகிறார்.

அனிருத் இசையில் ‘சொடக்கு சொடக்கு’ பாடல் ரசிக்கவைக்கிறது. சஸ்பென்ஸ் படத்துக்கு ஏற்ப பின்னணி இசையும் மிரட்டுகிறது.

கலை இயக்கமும் அருமை.

1980களின் காலகட்டத்தை அப்படியே கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். அந்தக்கால தினத்தந்தி, பெல்பாண்டம் பேண்ட்,  கோல்ட் ஸ்பாட் சோடா என்று  ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.

திரைக்கதையில் நிறைய ஓட்டைகள். குறிப்பாக கீர்த்தி சுரேஷ் என்னவானார்.. சூர்யாவுடன் இருந்த “பலே” கூட்டணி இறுதியில் என்னவாச்சு.. இப்படி நிறைய கேள்விகள்.. ஆனால் பதிலே இல்லை.

மொத்தத்தில்.. “தானா சேர்ந்த கூட்டம்”..  தியேட்டருக்கு வரும் கூட்டத்தை சிதறடிக்கும் கூட்டமாக இருக்கிறது.

  • மகிழன்