இஸ்லாமை அவமதித்தாக கைது செய்யப்பட்ட கிறிஸ்துவ பெண் விடுதலை: பாக்.கில் இருந்து வெளியேற்றம்!

ஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்திப் பேசியதாக கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண் விடுவிக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் வசிக்கும் ஆசியா பீபி (வயது 47) என்ற கிறிஸ்தவ பெண், இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தி பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விவகாரத்தில் அவர் மீது மத நிந்தனை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கீழ் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் அவருக்கு 2010-ஆம் வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இந்தத் தீர்ப்பை லாகூர் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து ஆசியா பீபி, 2015-ஆம் வருடம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசியா பீவியை கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி விடுதலை செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் விடுதலை செய்யப்பட்டு ஆசியா பீவி வெளியே வந்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால், அவர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தரப்பில், மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை அவரை நாட்டை விட்டுச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு நடந்துவந்த போராட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன.

இதற்கிடையே  ஆசியா பீபியின் குடும்பத்தினர். யாருக்கும் தெரியாத இடத்தில் வசிக்கின்றனர். அவரது கணவர், மணீஷ் :”என் மனைவியை விடுதலை செய்யாமல் தாமப்படுத்தப்படுவது,  ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது. என் மகள்கள் அழுது கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் இன்னும் தங்களுடைய தாயை பார்க்கவில்லை”  என்று தெரிவித்தார்.

மேலும், தனது குடும்பத்தை பிரிட்டன் அல்லது அமெரிக்காவுக்கு அனுப்ப கோரினார்.

இந்நிலையில், தீர்ப்பு வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், ஆசியா பீபி சிறையில் இருந்து விடுவிக்கப்படாமல் இருந்தார். இந்நிலையில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு சிறையில் இருந்து ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்டார். இதை அவரது வழக்கறிஞர் சைஃப் முலூக் தெரிவித்துள்ளார்.

ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளத்துக்கு அழைத்துச்செல்லப்படும் அவர், அங்கிருந்து வேறு நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அவர் எந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Christian woman arrested for insulting islam: released from jail: exit from Pak, இஸ்லாமை அவமதித்தாக கைது செய்யப்பட்ட கிறிஸ்துவ பெண் விடுதலை: பாக்.கில் இருந்து வெளியேற்றம்!
-=-