கர்நாடக இசையில் கிறிஸ்தவ பாடல்களை பாட இருந்த இசை நிகழ்ச்சி எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
பிரபல கர்நாடக இசைப் பாடகர் ஓ.எஸ்.அருணின் ‘இயேசுவின் சங்கம சங்கீதம்’ என்ற இசை நிகழ்ச்சி, வரும் 25ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில், இயேசுநாதரை புகழ்ந்து பாடும் கீர்த்தனைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை சில இந்து அமைப்புகளும், கர்நாடக இசை ரசிகர்களின் ஒரு பிரிவினரும் சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்த்துவந்தனர்.
மத ரீதியான விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, தியாகராஜரின் ராமர் கீர்த்தனைகளில் வார்த்தைகள் மட்டும் மாற்றப்பட்டு, கிறிஸ்தவ பாடலாக்கப் படுவதாகவும் விமர்சித்தனர்.
இதற்கு முன் தேவாலயத்தில் கச்சேரி நடத்திய டி.எம்.கிருஷ்ணா, கிறிஸ்தவ பாடல் பாடிய நித்யஸ்ரீ மகாதேவன், கிறிஸ்தவ பாடல் தொகுப்பை வெளியிட்ட அருணா சாய்ராம் ஆகியோருக்கும் எதிர்ப்பு கிளம்பியது. மதமாற்றம் செய்யும் அமைப்புகளுக்கு இவர்கள் துணை போவதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டனர்.
இதற்கிடையே “சொந்த காரணங்களுக்காக ஆகஸ்ட் 25 நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறL” என்று ஓ.எஸ்.அருண் அறிவித்துள்ளார்.
ஆனாலும் குறிப்பிட்ட பிரிவினரின் எதிர்ப்பு காரணமாகவே அவர் இசை நிகழ்ச்சியை ரத்து செய்ததாக பரவலாக பேசப்படுகிறது.