சென்னை: புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் காலராநோய் பரவி வருவதால், தமிழக மாவட்டங்களில் உஷாராக இருக்கும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகிநகர் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.1.49 கோடி செலவில் அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை யும் அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அங்குள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில்  ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  புதுச்சேரியில் இதுவரை 39 பேருக்கு காலரா இருப்பது தெரியவந்துள்ளது . இதையடுத்து, தமிழகமும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. காரைக்கால் சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களை  கண்காணித்து வருகிறோம். குறிப்பாக  நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருமருகள், கணபதிபுரம், நாகூர், மயிலாடுதுறை மாவட்டத்தின் திருக்கடையூர், சங்கரன் பந்தல், திருவாரூர் மாவட்டத்தின் கொல்லாபுரம், வெல்லாங்குடி ஆகிய காரைக்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினர் நேரடியாக அங்குள்ள குடிநீரை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் சுகாதாரப்பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. காலரா பரவாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றவர். மக்கள், பொது இடங்களில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய் பரவல் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  அத்துடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வயிற்றுப்போக்கு,  வாந்தி ஆகியவற்றுக்கு தேவையான மருந்துகளை கையிருப்பில்  வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறினார்.

பொதுமக்கள் காய்ச்சிய தண்ணீரை பருக வேண்டும் என கூறியவர், உணவை நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், காரைக்காலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் கண்காணிப்பினை வலுப்படுத்தி உள்ளோம் என்றும் கூறினார்.