ராஜபக்ஷே
கொழும்பு:
எனது ஆட்சியின் போது சீனாவின் செல்வாக்கு அதிகரித்த போது எதிராக குரல் எழுப்பிய இந்தியா தற்போது அமைதியாக உள்ளது என்று முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறினார்.
வெளிநாட்டு செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இலங்கைக்கு சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் வந்தபோது இந்தியா எனக்கு எதிராக எழுந்தது. ஆனால் இப்போது அவர்கள் எலிகளை போன்று அமைதியாக உள்ளனர். எனது சொந்த ஊரான ஹம்மன்தோடாவில் தொழில்துறை மையம் அமைக்க சீனாவிற்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்குவதற்கு எதிராக இருந்தேன். தொழிற் பூங்கா அமைவதை வரவேற்கிறோம், ஆனால் 15 ஆயிரம் ஏக்கர் என்பது மிகவும் அதிகமானது. மைத்திரிபால சிறிசேனா அரசு திரிகோணமலை துறைமுகம் அல்லது பலாலி விமான நிலையத்தை அவர்களிடம் கொடுப்பதை இந்தியா காத்திருந்து பார்க்கத்தான் போகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இந்தியா எனக்கு உதவி செய்தது. ஆனால் அமெரிக்காவின் தலையீட்டால் எனக்கு எதிராக செயல்பட்டது.
இந்தியா என்னுடன் வரவேண்டும் என விரும்பினேன். ஆனால் அவர்கள் தென் இந்தியாவின் அணுகுமுறை காரணமாக வர விரும்பவில்லை. மேற்கத்திய நாடுகள், இந்தியாவின் உளவுப்பிரிவு மற்றும் பிறர் எனக்கு எதிராக செயல்பட்டனர். அவர்கள் 2015-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த அதிபர் தேர்தலுக்கு இரு வருடங்களுக்கு முன்னதாக இத்தகைய நிலைப்பாட்டை எடுக்க தொடங்கிவிட்டனர். அதனால் தான் இவர்களது பின் பலத்தை எதிர்த்து எனது பிரசாரம் எடுபடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.