குழந்தைகள் தினம்: எல்லோரும் கொண்டாடுவோம்!

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

காதலிக்கும்போது எதிர்பாலினத்தைக் கவர்வதற்காக செய்த காரியங்கள் ஒவ்வொன்றும் பின்னாளில் நினைத்துப்பபார்க்கும்போது இப்படியெல்லாம் நாம் நடந்துகொண்டோமா என காமெடியாக தோன்றும்.

அந்த காரியங்கள் அத்தனையும் கனவுலக சஞ்சாரம் என்றாலும், அவை இருந்தால்தான் இளமை என்ற பருவமே அதற்கான முழுமையுடன் கடந்ததாக அர்த்தம். அதேபோலத்தான் குழந்தைப்பருவத்தின் குறும்புத்தனங்களும்.

இப்படித்தான் இருந்தாகவேண்டும் என்றெல்லாம் இலக்கணமே இல்லாதவை.. காட்டாறுபோல பாய்ந்தோடும்.

உலகில், பெரியவர்களாக உள்ள அனைவரிடமும், இயற்கை ஒரு வாய்ப்பு கொடுத்து நீங்கள் எந்த பருவத்தை திரும்பவும் அடைய விரும்புவீர்கள் என்று கேட்டால், அனைவரின் வாயில் வருவது இளமைப்பருவமாக இருக்காது, அது குழந்தைப்பருவமாகத்தான் இருக்கும்.

மனித பிறப்பிற்கு இயற்கை கொடுத்த மிகப்பெரிய பரிசு, ஈடு இணையில்லாத குழந்தைப்பருவம்.

சுட்டால்தான் சூரியன், ஓடினால்தான் ஆறு, தீர்க்கமாக பேசினால்தான் ஞானி, கிளர்ச்சி உண்டானால்தான் இளமை என எல்லாவற்றிற்கும் பிரத்யேக சிறப்பம்சங்கள் எப்படி உள்ளனவோ, அப்படி சதா குறும்புத்தனத்துடன் திரிவதே குழந்தைக்குண்டான சிறப்பம்சம்.

என்ன செய்வார்கள் என்றும் பெரியவர்களுக்கு விளங்காது, என்ன பேசுகிறார்கள் என்பதும் புரியாது. ஆனால் கொள்ளை இன்பம் கொட்டித்தருவது, அந்த மழலைத்தனம்தான்.

பலமுறை படித்து, கேட்டு சலித்துப்போனாலும், ‘’குழல் இனிது யாழ் இனிது என்பவர்கள் மழலைச்சொல் கேளாதவர்கள்’’ என்பது எவ்வளவு அப்பட்டமான உண்மை.

நாள் முழுவதும் கொஞ்சினாலும் மழலை தரும் இன்பம் சோர்வையே தராது. அப்படிப்பட்ட குழந்தைப்பருவத்தை காலம்காலமாய் மனித இனம் நன்றாகவே அனுபவித்தது வந்தது…

ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் எந்திரமயமும், தகவல் தொழில் நுட்பமும் என்றைக்கு கைகோர்த்ததோ, அன்றைக்கே ஆரம்பமானது குழந்தைப்பருவத்தை ஒடுக்கி மூலையில் தூக்கிகடாசும் வேலை..

தரையில் தவழும் நிலைமுடிந்து நடக்கும்நிலை வந்ததும் குழந்தைகளின் விளையாட்டு பயணம் தினமும் எத்தனை மணிநேரம் ஓடும், எப்படி ஓடும் என்பதை கணிக்கவேமுடியாது. அப்படி துறுதுறுவென்று ஓடியாடி மழலை இன்பத்தை தரவேண்டிய குழந்தையை, அதன் பருவத்திலேயே மேதையாக பார்க்க துடிப்பது அபத்தமானது மட்டுமல்ல.. சாடிஸ்ட் மனப்பான்மையும்கூட. எல்லாவற்றிற்கும் காரணம், பாடமதிப்பெண்கள் என்ற ஓட்டப்பந்தயம்.

நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கி பெரிய படிப்பு படித்து, பெரிய வேலைக்கு போய் நிறைய சம்பாதித்து, சந்தோஷமாக வாழவேண்டும் என்று போடப்பட்ட சாலையில் குழந்தைகளை பெற்றோர், மாட்டைவிட கேவலமாய் சாட்டை கொண்டு அடித்து விரட்டிக்கொண்டே இருக்கின்றனர்.

ஐந்து வயதுவரை வீட்டில் விளையாடிய குழந்தைகள், காலப்போக்கில் கொஞ்சம் முன்கூட்டியே பள்ளிக்கு போய் விளையாடிவிட்டுதான் வரட்டுமே என்ற சாதாரண நோக்கத்தில் எல்கேஜி. யூகேஜிக்கு அனுப்பப்பட்டார்கள். ஆரம்பத்தில் எல்கேஜி, யூகேஜி பள்ளிகள் விளையாட்டுக்கே முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை மகிழ்வித்தன. அடுத்து ஆரம்பிக்கப்பட்ட ப்ரீ கேஜி வகுப்புகளும், விளையாட்டுடன் கூடிய கொஞ்சம் படிப்பே என்றுதான் இருந்தன.

ஆனால் காலப்போக்கில் பணம் சம்பாதிப்பது மட்டுமே ஒரே நோக்கம் என்றானபின், கல்விக்கு முக்கியத்துவம் தருவதாக பாவ்லா காட்டி, தாறுமாறாய் புத்தகங்களை வினியோகிக்க ஆரம்பித்து அதற்கேற்ப கட்டணங்களை கட்டச்சொல்லி வேலையை காட்டினார்கள்.

விளையாடிவிட்டு வரட்டுமே என்று எல்கேஜி யூகேஜி அனுப்பியவர்கள், பிள்ளைகள் கொஞ்சம் படிக்கவில்லையென்றாலும் பதறிப்போகும் மோசமான ரேங்க் நோய்க்கு ஆளாகிப்போனார்கள்.

எதிர்காலமே பிள்ளைகள்தான் என்று வாழும் பெற்றோர், பூச்சாண்டி காட்டிய பள்ளிகள் முன்  எல்லாவற்றிற்கும் தலையை தலையை ஆட்டி கேட்ட பணத்தை கொட்டினார்கள். இங்கே கல்வி, பணம் என்ற இரண்டு விஷயங்களைவிட மிக முக்கியமானது, குழந்தைகளிடமிருந்து பிடுங்கப்பட்ட குறும்புத்தனம்.

வாங்கிய காசுக்கு பிள்ளைகளுக்கு அறிவை பக்கெட் பக்கெட்டாய் அள்ளி, தலைக்குள் ஊற்றுவதாகச்சொல்லி, எல்கேஜி வகுப்பிலேயே குழந்தைகள் கல்வி அறிவுக்காக பிழியப்பட்டனர். வகுப்பறையிலிருந்து சக்கையாக அனுப்பியபோதும், அசரவே அசராத அதிமேதாவிகள், வீட்டுக்குபோன பிறகும் குழந்தைகள் விளையாடி விடக்

கூடாதே என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். அதன்படி ஹோம் வொர்க் எனப்படும் வீட்டுப்பாடத்தை மூட்டையாய் கட்டி குழந்தையின் முதுகில் ஏற்றி அனுப்பினார்கள்.

கோலி, கிட்டி புல்,  பச்சைக் குதிரை,  காற்றாடி, பம்பரம், கண்ணாமூச்சி, நொண்டியாட்டம் என சிறுவரின் விளையாட்டுகள் எண்ணற்றவை இருந்தன.

ஆனால் பாருங்கள், அவை பொறுக்கிகளின் விளையாட்டுகள் என முத்திரை குத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டு விட்டன. சிறுமிகளிடமிருந்தும் வயதுக்கு பொருந்தாக விளையாட்டுகள் என பிடுங்கப்பட்டன.

காலையில் எழுந்தது முதல் இரவு உறக்கம்வரும் வரை குழந்தைகள் கேட்கும் ஒரே வார்த்தை படி, படி. படி, படி. படி, படி. படி, படி. படி, படி. என்பதுதான். பள்ளியில் இருந்தாலும் படித்தாகவேண்டும். பள்ளியை விட்டு வீட்டுக்கு போனாலும் படித்தாகவேண்டும். இடையில் டியூசன் வைக்கப்பட்டு அங்கே சென்றாலும் புத்தகமே கதி என கிடந்தாகவேண்டும்.

பெற்றோர் என்ற கையை வைத்தே குழந்தைப்பருவம் என்ற கண்ணை குத்திய கில்லாடிகள் இந்த புற்றீசல்போல முளைத்த தனியார் பள்ளிகள்தான்..

ஒரு குழந்தையின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கும் கடவுள்களாகவே காட்டிக்கொள்ளும் இந்த பள்ளிகள், குழந்தை பருவத்தின் முக்கிய விரோதிகள் என்று பலருக்கும் புரிவதில்லை.

எதிர்பாராமல் அல்லது கடைசிநேரத்தில் தவிர்க்கமுடியாமல், முக்கியமான  உறவினர் வீட்டு சுபகாரியம், துக்க நிகழ்ச்சி, வேறு விதமான திடீர் பயணம் என போய்வர நேரிட்ட பிறகு இந்த பிள்ளைகளையும் பெற்றோரையும், ‘செம பந்தா’ பிடித்த பள்ளிகள் வாட்டியெடுக்கும் விதங்கள் இருக்கின்றனவே, அதை விவரிக்க புராணக்கடவுளே இன்னொரு அவதாரம் எடுத்துவரலாம்.. அவ்வளவு அக்கப்போர் ரகம் அது.

ஒரேயொரு நாள் லீவு போட்டால் பாடம் படிப்பது கெட்டுப்போய் உலகமே அழிந்துபோய்விடும் என்று சீன் போடும் இந்த பள்ளிகளின் பேச்சுக்குமுன் எந்த பெற்றோரும் மூளையை கசக்கி சிந்திப்பதேயில்லை

ஒருநாள் லீவுக்கே விளக்கத்தை வண்டிவண்டியாக லெட்டர் எழுதிக்கொண்டுபோய் பள்ளி நிர்வாகியின் அறைக்கு வெளியே நாய்போல் காத்துகிடக்கிறோமே என்று இவர்களுக்கு உரைப்பதேயில்லை.

நம் வீட்டு குழந்தை எங்கே, யாருடன் எப்படி பொழுதை கழிப்பது என்பதை முழுக்க முழுக்க தீர்மானிக்க இவர்கள் யார் என்ற ரோஷமே வருவதில்லை.. உடல்நலக்குறைவால் லீவுபோட்டால்கூட, அதை நம்பாமல் பெரிய மருத்துவ நிபுணர்கள்போல் துருவித்துருவி பள்ளி நிர்வாகி விசாரிக்க, பெற்றோரும் நடுக்கத்தோடு விளக்கம் சொல்லும் கொடுமைக்கெல்லாம் பஞ்சமே கிடையாது.

ஆனானப்பட்ட அரசாங்கமே மாதத்திற்கு இத்தனை நாள் தற்காலிக விடுப்பு, ஆண்டுக்கு இத்தனை நாள் மருத்துவ விடுப்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு என ஒய்வு மற்றும் வாழ்க்கையின் அத்தியாவசிய அம்சங்களை மனதில் வைத்து விடுப்புகளை தருகிறது..

ஆனால் துள்ளித்திரியவேண்டிய குழந்தைகளை, கல்வி என்ற பெயரால், எவ்வளவு வாட்டியெடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் வாட்டியெடுத்து, பெற்றோரை மிரட்டி மிரட்டி பணம் பண்ணுகின்றன.

பள்ளி பொதுத்தேர்வுகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவைகூட ஆண்டுக்கு சில மாதங்கள் மாணவர்களுக்கு படிக்கவேண்டிய கட்டாயம் இல்லாத நிம்மதியான சூழலைத்தருகின்றன. ஆனால் குழந்தைகளுக்கு போதிக்கும் பள்ளிகள் மட்டும் மார்ச், ஏப்ரல் என கொளுத்தும் வெய்யிலிலும் வகுப்புகளை நடத்தி மே ஒன்றாம் தேதி பிறக்கும்வரை கொடுமைப்படுத்துகின்றன.

இதையும் தாண்டி ஆண்டு விடுமுறை வந்தால், உறவுகளின் வீட்டுக்கு அனுப்பி சந்தோஷமாக இருக்கவிடாமல்… சம்மர் கோச்சிங் என விதவிதமான டுபாக்கூர் வகுப்புகளுக்கு அனுப்பி 24 மணி நேரமும்  குழந்தைப்பருவத்தை கொல்லுவதிலேயே பெற்றோர் குறியாக இருக்கிறார்கள்.

மூன்று வயது குழந்தைக்கு குதிரையேற்ற பயிற்சி, உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானத்தை  ஓட்டும் பயற்சி என்று விளம்பரம் வந்தாலும் ஓடிப்போய் பணத்தை கட்டி அதில் குழந்தைகளை சேர்த்துவிடுகிறார்கள்.

மொத்தத்தில் குழந்தைகளை,  குழந்தைப்பருவத்திலேயே அறிவாளிகளாக ஆக்கும் முயற்சிதான் நடக்கிறது.. முதலில் குழந்தைகளை, குழந்தைகளாக அதற்குண்டான அம்சங்கள் அத்தனையையும் அனுபவிக்கவிடுங்கள்..

குழந்தை அதன் இயல்புக்கு மாறாக மிகவும் அறிவாளித்தனமாக பேசியோ

நடக்கிறதோ என்றால் அந்த குழந்தையிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்றே அர்த்தம்.

இதை புரிந்துகொண்ட பிறகு கொண்டாடுங்கள் குழந்தைகள் தினத்தை….

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Children”s day: We   all celebrate, குழந்தைகள் தினம்: எல்லோரும் கொண்டாடுவோம்!
-=-