குழந்தைகளுக்கு அலகு குத்திய பெற்றோர் மீது நடவடிக்கை!: குழந்தை உரிமை  ஆணைய தலைவர் உறுதி

நேர்த்திக்கடன் என்ற பெயரில் தங்கள் குழந்தைகளுக்கு அலகுகுத்திய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில குழந்தைகள் உரிமை ஆணைய தலைர் நிர்மலா, patrikai.com  இதழிடம் தெரிவித்தார்.

சுமார் எட்டு மற்றும் நான்கு வயது குழந்தைகளுக்கு கன்னங்கள் மற்றும் மார்புப்பகுதியில் அலகு குத்தப்பட்டிருக்க.. அக்குழந்தைகள் கதறும் படம் முகநூலில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நேற்று இந்தப் படத்தை பதிவிட்ட ரமேஷ் சி.ஆர். என்பவர், “இன்று சென்னை புளியந்தோப்பு பகுதியில்  உள்ள ஸ்ரீ முண்டகன்னியம்மன் கோயிலில் எங்கள் செல்வங்களுக்கு பழம் குத்தப்பட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உடலில் குத்தப்பட்ட அலகுகளால் குழந்தைகள் கதறித்துடிக்கும் இந்தப் படங்கள் சமூகவலைதளங்களில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள்.. பெற்றோருடன்..

இந்த சம்பவம் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பிரபல மனநல நிபுணர் ஷாலினி,  மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்ரி டிபேன் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு  patrikai.com இதழில் இன்று வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் தமிழ்நாடு குழந்தை உரிமை  ஆணைய தலைவர் நிர்மலாவிடம் பேசினோம்.

அவர் இது குறித்து நமது  patrikai.com  இதழிடம் தெரிவித்ததாவது:

“அனைவருக்கும் மதங்களைப் பின்பற்றவோ பின்பற்றாமல் இருக்கவோ நமது சட்டம் உரிமை அளித்துள்ளது. அதே நேரம் மத்ததின் பெயரால் தனிமனித உரிமை பாதிக்கப்படுவதையோ, பிறர் – குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படுவதையோ சட்டம் அனுமதிக்கவில்லை.

நிர்மலா

குறிப்பிட்ட சம்பவத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. இப்படி சடங்கு என்ற பெயரில் ஊசியால் குத்துவதும் தவறே. இதனால் குழந்தைகளின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அவர்களது மனநிலையும் பாதிக்கப்படும்.

தாங்கள் பெற்ற குழந்தையானாலும் அவர்களைத் துன்புறுத்த பெற்றோருக்கு உரிமை இல்லை.

இந்த விசயத்தில் குறிப்பிட்ட பெற்றோர்கள் குழந்தைகளின் உரிமையை பறித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து, அந்த பெற்றோர் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: child rights commission chairman told strict action against parents who pierced children, குழந்தைகளுக்கு அலகு குத்திய பெற்றோர் மீது நடவடிக்கை!: குழந்தை உரிமை  ஆணைய தலைவர் உறுதி
-=-