ஈரோடு: ஈரோடுகிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் முடியும் நிலையில், காலை 10 மணிக்கு தனது தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.

திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார். அந்த தொகுதிக்கு உட்பட்ட சம்பத் நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து  வாக்குச்சேகரித்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் காரணமாக நாளை மறுதினம் (27ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசுவும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதனும், தேமுதிக சார்பில் அனந்தனும் பிரதான கட்சி வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். மேலும் இதர கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தலையொட்டி பிரசாரம் இன்று மாலையுடன்  ஓய்வு பெறுகிறது. இதையொட்டி அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.  இதற்காக நேற்று கோவைக்கு விமானம் மூலம் சென்ற ஸ்டாலின்,  நேற்றிரவு  ஈரோடு சென்றார். அவருக்கு திமுக உள்பட கூட்டணி கட்சியினர் சார்பில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று   காலை 9 மணிக்கு சம்பத்நகர், காந்திசிலை மற்றும் பி.பெ.அக்ரஹாரம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் அவர் மதியம் முனிசிபல் காலனி, பெரியார் நகர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதுபோல, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இன்று இறுதி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளதையடுத்து வெளியூர் நபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீசார் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொகுதியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை நடத்தவும் மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். விதிகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது