நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இன்று கள ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர் களை சந்தித்து பேசினார். அப்போது, வதந்தி குறித்து கவலைப்பட வேண்டாம் என்றார்.

கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. 6.5 அடி உயர் பீடத்தில் 8 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

இதனையடுத்து நாகர்கோவில் அருகே உள்ள காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கானம் லேட்டக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றும் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மாநிலங்களை சேர்ந்த  சுமார் 147 வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அந்த தொழிலாளர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களிடம்   தொழிற்சாலையில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்பதை கேட்டறிந்தார்.

மேலும், தமிழ்நாட்டில் நிலவி வரும் சூழல் குறித்த கேட்ட முதல்வர் தைரியமாக இருங்கள், வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறியதுடன், தொழிற்சாலைகளில் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்பு மற்றும் உரிய சம்பளம் வழங்கப்படுகின்றனவா என அவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வில் முதலமைச்சரோடு தகவல் தொழிநுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டு சென்றார்.