சென்னை; முக அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியா வீட்டுக்கு இன்று திடீரென சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு சிறுமி தானியாவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த 9 வயது சிறுமி தானியா. இவர், அரியவகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறித்து செய்தி வெளியானது. இதையடுத்து, சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  23ம் தேதி சிறுமி தான்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் முதற்கட்ட முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  தொடர்ந்து 21 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு  பூரண நலமடைந்த தானியா வீடு திரும்பினார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். சிறுமியின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பின்னர்  பிப்ரவரி 8ந்தேதி,  பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி தானியாவுக்கு 2 கட்டமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வீடு திரும்பினார்.

இந்த நிலையில், இனறு ஆவடி பட்டாபிராம் தனியார் கல்லூரியில், புதுமைப்பெண் 2வது கட்ட திட்டத்தை தொடங்கிவைத்த த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சி முடிந்ததும்,  சிறுமி தானியா வீட்டுக்கு சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார்.   அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, நாசர் ஆகியோர் உடன் சென்றனர்.