சிதம்பரம் – சுவாமி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

ஐ.என். எக்ஸ். நிறுவனத்துக்கு முறைகேடாக இந்தியாவில் முதலீடு செய்ய உதவியது, அலைக்கற்றை விவகாரத்தில் முறைகேடாக நடந்துகொண்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது.

“இது அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கை” என்று காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்படும் நிலையில், “ப.சிதம்பரம் குற்றவாளி. அவரை சிறையில் தள்ள வேண்டும்” என்று பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ப.சிதம்பரம் ஒரு பொய்யர், ஏமாற்றுக்காரர். மோசடி பேர்வழி. அவரை சிறையில் அடைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

“ 2 ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனத்துக்கு இந்தியாவில் முதலீடு செய்ய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளித்தார்” என்று ஏற்கெனவே சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடிக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ” 2ஜி அலைக்கற்றை ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளது. சட்டத்துக்குப் புறம்பான பணபறிமாற்றத்துக்கு அவர் அனுமதி அளித்துள்ளார்.  அலைக்கற்றை அனுமதி பெற்ற நிறுவனங்களில் ஒன்றான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்குத்தான் சிதம்பரம் உதவியுள்ளார். இது நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடனும் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளதாகும். ஆகவே சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சுவாமி தெரிவித்திருந்தார்.