சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட்ட 38,000 மருத்துவ இடங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து இருக்கிறது.

மருத்துவப்படிப்புகளில் சேர மத்திய அரசால் நீட் நுழைவுத் தேர்வு தற்போது நடைமுறையில் இருக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.

நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்த மாணவர்கள் பலர் (மறக்க முடியாத அனிதா) தமது உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. ஆனால், நீட் தேர்வு என்பது ரத்து செய்யப்படவில்லை.

இந் நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்த சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அரசை நோக்கி தமது சாட்டையை சுழற்றியிருக்கிறது.

தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.ஹெச். அர்விந்த் பாண்டியன் இந்த தரவுகளை சென்னை உயர்நீதிமன்றத்திடம் சமர்ப்பித்து இருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:

தமிழகத்தில் உள்ள 23 மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 3,081 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன.அவர்களில் வெறும் 48 பேர் மட்டுமே எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

மற்ற இடங்கள் அனைத்தும், நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பாஸ் செய்து மருத்துவ படிப்பில் நுழைந்திருக்கின்றனர். தவிர, முதல் முறையிலேயே 1,040 மாணவர்கள் நீட் தேர்வை வென்றிருக்கின்றனர். 2,041 பேர் இரண்டு அல்லது 3வது முறையில் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்பட்ட இடங்கள் பற்றி தரவுகளும் அதில் இடம்பெற்று இருக்கின்றன. 1,650 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தாலும், அவர்களில் 52 பேர் மட்டுமே எவ்வித பயிற்சி மையத்தின் கீழ் பயிற்சி பெறாமல் தேர்வாகி இருக்கின்றனர். மற்ற 1,598 பேரும் பயிற்சி மையத்தில் சேர்ந்து, நீட் தேர்வில் வெற்றி கண்டிருக்கின்றனர்.

ஒரு படி மேலே போய், அவர்களில் 588 பேர் முதல் முறையில் நீட் தேர்வில் வெற்றியும்,1,062 பேர் பலமுறை பயிற்சி பெற்று, பாஸாகி இருக்கின்றனர். இந்த தரவுகளை விரிவாக ஆய்வு செய்த நீதிபதிகள் என். கிருபாகரன், பி. வேல்முருகன் ஆகியோர்  கடும் கண்டனங்களையும், கருத்துகளையும் மத்திய அரசை நோக்கி கேட்டு இருக்கின்றனர்.

அவர்கள் கூறி இருப்பதாவது: குறைந்த எண்ணிக்கை கொண்ட மாணவர்களே, பயிற்சி மையத்தில் படிக்காமல் நீட் தேர்வில் வென்றுள்ளனர். இது ஒன்றை மிக தெளிவாக காட்டுகிறது.

அதாவது, மருத்துவக் கல்வி என்பது, ஏழை மக்களுக்கு இனி கிடையாது, லட்சக் கணக்கான ரூபாயை பயிற்சி மையங்களில் கொட்டி செலவழிக்க முடியும் என்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். கிராமப்புற மாணவர்கள் பயிற்சி பெற வசதிகள் இல்லாததால், அவர்களுக்கு பாதகமாக இருக்கிறது.

இதை மத்திய அரசு கருத்தில் கொண்டு, நீட் தேர்வை நடத்துவதற்கான விதிகள், ஒழுங்கு முறைகளை மாற்ற வேண்டும். முதல் முறை பிளஸ் 2 பயிலும் மாணவர்களை விட, ஏற்கனவே பயின்ற மாணவர்கள் அதன் பிறகு நீட் தேர்வுக்காக கூடுதல் நேரம் ஒதுக்கி தயாராக முடிகிறது. இந்த விஷயத்தை மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் நீதிபதி கிருபாகரன் மேலும் பல முக்கிய விஷயங்களை மத்திய அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி கிடையாது, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே என்பதை இந்த விஷயங்கள் தெளிவாக காட்டுகின்றன. அது தான் தற்போது உண்மையும் கூட.

நாங்கள் ஏழை மக்களுக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால், சரிசமமான நிலை என்பதே இந்த விவகாரத்தில் பின்பற்றவோ, கடைபிடிக்கவோ இல்லை. கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சியில் இருந்த அரசு எடுத்த எல்லா முடிவுகளையும் நீங்கள் (மத்திய அரசு) மாற்றுகிறீர்கள்?

ஏன் இந்த முடிவையும் மாற்றி விடுங்கள். நீட் தேர்வின் குறிக்கோள் என்பது, தனியார் மருத்துவக் கல்லூரிகள் பணம் ஈட்டக்கூடாது என்பது தான். ஆனால், தற்போது, என்ன நடக்கிறது? தனியார் பயிற்சி மையங்கள் பணம் சம்பாதிக்கின்றன.

நீட் தேர்வு விவகாரத்தில் ஒரு விஷயம் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. நீட் தேர்வில் ஆள் மாறாட்ட மோசடி என்பது தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் பதிவு செய்யப்படவில்லையே? இங்கு மட்டும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே?

அது எப்படி? ஆக இதன் மூலம் ஒரு விஷயம் நன்றாக வெளியாகி உள்ளது. இந்த மோசடியில் தமிழகத்தில் இருந்து வெளியில் தெரிந்திருப்பது ஒரு துளியே (ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல). மற்ற மாநிலங்களில் எச்சரிக்கையாக, அமைதியாக வாய்மூடி இருக்கின்றன.

அந்த ஒன்றை மட்டும் தான் இங்கே எங்களால் சொல்ல முடியும்? இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் நீட் தேர்வு வழியே நிரப்பப்பட்ட 38,000 இடங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டி இருக்கும் என்று கூறினர்.

பின்னர், நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்களின் கைரேகை பதிவுகளை தாக்கல் செய்யுமாறு தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. அந்த விவரங்களை சிபிசிஐடியினர் சரிபார்க்க வேண்டும் என்று கூறி வழக்கையும் வியாழன்று ஒத்தி வைத்து உத்தரவிட்டிருக்கிறது.