சென்னை:
மிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யக்கோரி தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர் பால்ராஜ் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்யக்கூடிய வேட்பாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், தேர்தலில் போட்டியிடும் 4,512 வேட்பாளர்களும் மருத்துவ பரிசோதனையை கட்டாயப்படுத்த வேண்டும்

பிரச்சாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்கள், குழந்தைகளை முத்தமிடுகின்றனர். முதியோரை கட்டிப்பிடிக்கின்றனர். அவர்கள் மூலம் கொரோனா பரவல் அதிகமாகும் அபாயம் இருக்கிறது. ஆகவே அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும்’. எனக் கோரி இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதிகள் உள்நோக்கத்துடன் அற்ப காரணங்களுக்காக, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் அடுத்த ஓராண்டுக்கு பொது நல வழக்குகள் தொடர தடை விதித்து உத்தரவிட்டனர்.