டெல்லி: சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 4 மிதவை இறங்கு தளங்களுக்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்திய பொருளாதாரத்தை ஊக்கும் வகையில், துறைமுக இணைப்பை அதிகரிக்கவும், துறைமுக தலைமையிலான முன்னேற்றங்களை ஊக்குவிக்கவும், இந்திய அரசு சாகர்மாலா என்ற திட்டத்தை கடந்த 2015 ஆண்டு முதல் முன்னெடுத்து வருகிறது.

இந்த திட்டதின் முக்கிய நோக்கம் நாட்டின் துறைமுக உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதே. தற்போது, இந்தியாவில் 7,500 கிலோமீட்டருக்கும் அதிகமான கடலோரப் பகுதி மற்றும் 14,500 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்வழிகள் உள்ளன. இதன்மூலம், நாட்டின் கடலோரப் பகுதி மற்றும் செல்லக்கூடிய நீர்வழிகளைப் பயன்படுத்தி, தளவாடத் துறையின் செயல்திறனை அதிகரித்தல். துறைமுகங்களுக்கு சரக்குகளை விரைவாக எடுத்துச் செல்வதற்கு இது உள்கட்டமைப்பை வழங்கும். உள்கட்டமைப்பு முதலீடு மூலம் உள்நாட்டு மற்றும் EXIM (ஏற்றுமதி-இறக்குமதி) மற்றும் சரக்குகளுக்கான தளவாட செலவுகளைக் குறைப்பதும் இதன் நோக்கமாக உள்ளது.

இந்த சாகர்மாலா திட்டத்தின் மூலம், துறைமுக இணைப்பு, சரக்கு விரைவுச் சாலைகள், கச்சா மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் போக்குவரத்துக்கான புதிய குழாய்வழிகள், கடலோர சமூக மேம்பாடு, முன்னுரிமை உள்ள உள்நாட்டு நீர்வழிப்பாதை மேம்பாடு மற்றும் புதிய மல்டி-மோடல் போன்ற தொடர் திட்டங்களை உள்ளடக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் வாயிலாக பழமையான முறையில் நிரந்தர கப்பல் இறங்கு தரைகளை அமைப்பதற்குப் பதிலாக தனித்துவமான மிதக்கும் இறங்கு தளங்களை உருவாக்க மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

உள்நாட்டில் சரியான இணைப்பு இல்லாமை மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் போக்குவரத்து செலவு மற்றும் சரக்கு நகர்வு அதிகரிக்கும். துறைமுகங்களுக்கு மேம்பட்ட இணைப்பை வழங்குவதன் மூலமும், உள்நாட்டு நீர்வழிப்பாதைகளின் மேம்பாட்டுடன் ஒருங்கிணைப்பதன் மூலமும், சாகர்மாலா திட்டம் பொருட்களின் போக்குவரத்துக்கு தேவைப்படும் செலவையும் நேரத்தையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்கீழ்,  தமிழ்நாட்டில் 4 மிதவை இறங்கு தளங்களுக்கு கொள்கை அடிப்படையில் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆன்மீக தலமான ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம், கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய இடங்களிலும் இந்த இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன.

மிதவை இறங்கு தளங்கள் சுற்றுலாப் பயணிகள் தடையின்றியும், பாதுகாப்பாகவும் போக்குவரத்தை மேற்கொள்ளவும், கடலோர சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த மேம்பாட்டைக் கருத்தில் கொண்டும் அமைக்கப்படும் என தகவல்

சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பெரிதும் வழிவகுப்பதுடன் நீர் தொடர்பான சுற்றுலாவுக்கு புதிய வழிகளையும் உருவாக்கும் என மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.