ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

டில்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் 7 கைதிகளும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, தற்கொலை பெண் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் காரணமாக கொல்லப் பட்டார். உலகத்தையே உலுக்கிய இந்த சம்பவம், கடந்த  1991 ஆம் ஆண்டு மே 21ம் தேதி நடை பெற்றது.

இந்த கொடூர வெடிகுண்டு தாக்குதலை நடத்திய எல்டிடிஇ எனப்படும் விடுதலைப்புகளின் அமைப்பு. இது தொடர்பான வழக்கில் 1998ம் ஆண்டு இறுதி தீர்ப்பு  வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உட்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததன் மூலம் 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியதை தொடர்ந்து,  அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு  முடிவு செய்தது. ஆனால் அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று கூறி மத்திய அரசு தடுத்து வருகிறது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. ஏழு பேரின் விடுதலை குறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு, அவர்களை விடுதலை செய்ய முடியாது. நாட்டின் பிரதமரை படுகொலை செய்தவர்களை விடுதலை செய்தால், அது சர்வதேச ரீதியாகவும், அபாயகரமான செயலுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடும். இதுகுறித்து ஏற்கனவே தமிழக அரசுக்கு தெளிவு படுத்தப் பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய அரசின் வாதங்களை ஏற்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

Tags: Cannot release Rajiv Gandhi assassination case convicts, Centre informs Supreme Court, ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்