சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு, அவசர கால உதவிக்கு 1913க்கு அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், 044 25619206, 25619207, 25619208, 9445477205 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம், மாண்டஸ் புயலாக வலுப்பெற்று மணிக்கு 12கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. டிசம்பர் 9-ம் தேதி காலை வரை தீவிர புயலாக இருக்கும் என்றும் அதன்பின் படிப்படியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புயலை எதிர்கொள்ள தமிழகஅரசு, சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. பேரிடர் மீட்பு படையினர் ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக அதிக கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளனர்.

இந்த நிலையில்,  மாண்டஸ் புயல், தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வலுவடைந்து வருவதால், அவசர கால பாதிப்பு மற்றும் உதவிக்கு அவசர கால உதவி எண் 1913க்கு அழைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும்,  புயல் நாளை கரையைக் கடக்கவுள்ளதால்  சென்னை மெரீனா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின் வெட்டு, மின் கசிவு, போன்ற புகார்களுக்கு 1913 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 169 நிவாரண முகாம்கள் தயாராக இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.