ஸ்ரீரங்கம்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கம் கோவிலில் அத்துமீறியதாக காவல்துறையில் புகார் அளித்தவருக்கு பாஜக மிரட்டல் விடுத்துள்ளது

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் ஆலயத்தில் உலக நன்மைக்காக ஒரு பிரார்த்தனை நிகழ்வு நடந்தது.  இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் 15 முக்கிய ஆலயங்களில் பிரார்த்தனை நிகழ்வு நடந்தது.  இதில் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி ஆலயம் திருவானைக்காவல் ஆலயம் ஆகியவையும் அடங்கும்.

ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த பிரார்த்தனை கோவிலுக்குள் பெரிய ஸ்க்ரீன் வைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.   இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.   இந்த நிகழ்ச்சி முன் அனுமதியின்றி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.   இந்த புகாரை காவல்துறையினர் ஏற்றுக் கொண்டதால் பாஜகவில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த புகார் காரணமாக தம்மை அண்ணாமலை மற்றும் இதர பாஜகவினர் கடுமையாக மிரட்டுவதாக ரங்கராஜன் கூறியதால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ரங்கராஜன் தனது பேட்டியில், “நவம்பர் 5ஆம் தேதி,  ஸ்ரீரங்க அரங்கநாதன் சுவாமி கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அவரது கட்சிக்காரர்களுடன், தாயார் சன்னதி முன்பிருந்த கருத்துரை மண்டபத்தில், ஒரு எல்சிடி ஸ்கிரீன் மற்றும் ஸ்பீக்கர் வைத்து பாரத பிரதமர் மோடி அவர்களுடைய பேச்சினை கோவிலுக்குள்ளே ஒளிபரப்பினார்.  அவர்கள் கொஞ்சமாவது சட்டத்தைத் தெரிந்து கொண்டு பேசவேண்டும்,

எனது புகாருக்கு பிறகு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பாஜக தொண்டர்கள் என்னை தொலைபேசி வாயிலாக அழைத்து மிரட்டி வருகின்றனர்.  என் மீது எவராவது தாக்குதல் நடத்தினால் அதற்கு முழு பொறுப்பும் அண்ணாமலை தான்.  இதையே என்னுடைய வாக்கு மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் தொடர்ந்து அவர்களிடமிருந்து எனக்கு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.