பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கடந்த சில நாட்களுக்கு முன் ஞானவாபி மசூதி குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தினர், கான்பூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கல்வீச்சு நடத்தியதால் வன்முறையாக மாறியது.

இந்தியாவில் மட்டுமன்றி அரபு நாடுகளிலும் எதிர்ப்பு வலுத்தது, குவைத்தில் உள்ள குப்பை தொட்டிகளில் மோடியின் படத்தை ஒட்டி அசிங்கப்படுத்தினர்.

தவிர, முதல்முறையாக சவுதி அரேபியாவின் இஸ்லாமிய தலைமை மதகுரு இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து “இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இங்கு அனைத்து மதத்தினரும் சமமாகவே நடத்தப்படுகின்றனர்” என்று அறிக்கை விட்டது பா.ஜ.க.

இந்த நிலையில், நுபுர் சர்மா மற்றும் அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்ட நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

நுபுர் சர்மா மீது மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமுக்கு எதிரான போக்கை கண்டித்து… வளைகுடா நாடுகளில் இந்திய பொருட்கள் புறக்கணிப்பு…