சென்னை: திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக இன்று போராட்டம் நடத்தி வரும் நிலையில்,  சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நெல்லையில் போராட்டத்துக்கு தலைமை வகித்த பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்,  தமிழகத்தை 2 ஆக பிரித்து விடுவோம் என கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகஅரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அண்மையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பாஜக அரசின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்திருந்தார். பிரதமர் மோடியை பார்த்து தானும் குட்டி மோடி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார், அதற்கு  குடும்பத்தை மறந்து முதல்வர் உழைக்க வேண்டும்.ஆனால் திமுகவைப் பொறுத்தவரையில் குடும்பமே கட்சி,கட்சியை குடும்பம் என்ற நிலைதான் உள்ளது.திமுகவில் எது கட்சி, எது குடும்பம் என்று தெரியவில்லை”, என்றும் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று தமிழகஅரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்றும், நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், காவல்துறை மரணங்கள் அதிகரித்துள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், கோவையில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. நெல்லையில் பாஜக துணைத்தலைவர் மற்றும் சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், “ஆந்திரா, தெலுங்கானா போன்று நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என இனி போராட்டம் நடைபெறலாம். ஆகவே, தமிழகத்தை இரண்டாக பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்” என்று கூறினார். நயினார் நாகேந்திரனின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் திமுக எம்.பி. ராஜா,  திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசியபோது,  மாநில சுயாட்சி வழங்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்ததை சுட்டிக் காட்டிய நிலையில், நயினார் நாகேந்திரன் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டை இரண்டாக பிரித்துவிடுவோம் என்று கூறியது   தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.