கர்நாடக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல: எடியூரப்பா

பெங்களூரு:

ர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் நாங்கள் பொறுப்பற்ற என்று மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கூறி உள்ளார்.

கர்நாடக  ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில்  பாஜக ரகசிய முயற்சிகளை எடுத்து வருகிறது.  ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த முயற்சியில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 20 பேர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஆட்சி அதிகாரம் பறி போய்விடுமோ என்ற பயத்தால் முதல்-மந்திரி குமாரசாமி விரக்தி அடைந்துள்ளார். இதனால் சபாநாயகரிடம் மனு கொடுத்து, பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார் கூறி இருக்கிறார்.

இந்த விஷயத்தில் சபாநாயகரை இழுப்பது தவறானது. காங்கிரஸ் கட்சியில் சில எம்.எல்.ஏ.க்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு பா.ஜனதா எப்படி பொறுப்பாக முடியும்?.

எங்கள் கட்சியை சேர்ந்த சுபாஷ் குத்தேதார் எம்.எல்.ஏ.வை இழுக்க குமாரசாமி முயற்சி செய்தார். கலபுரகிக்கு சென்றபோது, எங்கள் எம்.எல்.ஏ.விடம் குமாரசாமி பேசினார். ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வை கூட இழுக்க முயற்சி செய்யவில்லை. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு பா.ஜனதா பொறுப்பு அல்ல. அவர்களின் உட்கட்சி பிரச்சினை தான் அதற்கு காரணமாக இருக்கும்.

சபாநாயகரிடம் கொடுத்த புகாரில், பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டணி ஆட்சியில் உள்ள தோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பவே குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டை ஜனதா தளம்(எஸ்) கூறுகிறது.

மாநிலத்தில் வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை இந்த அரசால் செய்ய முடியவில்லை. அதனால் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பா.ஜனதா மீது புழுதி வாரி இறைக்கிறார்கள். ஆட்சி பறிபோய்விடுமோ என்ற பயம் வந்துவிட்டதால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இவ்வாறு குற்றம்சாட்டுகின்றன.

மக்களின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆயினும் நாங்கள் இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்று பல முறை கூறி இருக்கிறோம். எதிர்க்கட்சியாக பா.ஜனதா தனது கடமையை ஆற்றி வருகிறது. வளர்ச்சி திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ஆனால் ஆட்சியில் வளர்ச்சி பணிகள் நடைபெறாதபோது, நாங்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.

இந்த அரசின் பெரும்பான்மை எண்ணிக்கை குறையும்போதோ அல்லது சரியாக செயல்படாதபோதோ ஆட்சி அமைக்க உரிமை கோருவது தவறா?. குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது இந்த மாநிலத்திற்கே தெரியும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP is not responsible if the Karnataka coalition government is overturned: said bjp leader and former CM Yeddyurappa, கர்நாடக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல: எடியூரப்பா
-=-