மதுரை: மதுரையில் உள்ள பிரபலமான  அரசு மருத்துவமனையான  ராஜாஜி அரசு மருத்துவமனையின் பெயரை, ராஜாஜி – கக்கன்ஜி  என  மாற்ற வேண்டும்  பாரதியார்  சிந்தனையாளர்கள் மன்றம் தமிழகஅரசுக்க கோரிக்கை வைத்துள்ளது.

தென்மாவட்ட மக்களின் பிணி தீர்க்கும் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது மதுரையில் அமைந்துள்ள ராஜாஜி மருத்துவமனை.  தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களைச் சார்ந்த இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மூன்றாம் நிலை சிகிச்சை வழங்கி வருகிறது.

 1842 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனை, 1872 மதுரை நகராட்சியின் கட்டுப்பாட்டிலும், பின் 1918 இலிருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. 1954 இல் இருந்து கற்பிக்கும் மருத்துவமனையாகவும் உள்ளது. மருத்துமனையின் மொத்த பரப்பளவு 12.47 ஏக்கர்கள் .. படுக்கைகளின் எண்ணிக்கை 1,574. மதுரை மருத்துவக் கல்லூரி இம்மருத்துவமனையுடன் இணைப்பைப் பெற்றுள்ளது. இம்மருத்துவமனையில் 24 மணி நேரம் அவசர சிகிச்சை உதவி மற்றும் ஆய்வுக்கூட வசதி ஆகியவை உள்ளன. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் இம்மருத்துவமனை வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

இந்த மருத்துவமனையின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ‘ மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை (ஜிஆர்எச்) அரசு ராஜாஜி & கக்கன்ஜி மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என மதுரையில் உள்ள பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. மேலும் எளிமைக்கு பெயர் பெற்ற முன்னாள் அமைச்சரின் உருவப்படம் மருத்துவமனையில் நிறுவப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.