பக்ரித் – தியாக திருநாள்!

Must read

Bakrid – தியாகத் திருநாள் 

உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய  பண்டிகை பக்ரித் ஆகும்.இதனை தியாகத் திருநாள் என்றும்,ஹஜ்  பெருநாள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை இதுவாகும்.

அல்லாஹ்வின் தூதரான நபி இப்ராஹீம் அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நபி  இப்ராஹிம் அவர்களுக்கு நெடு நாட்களாக குழந்தை பாக்கியம்  இல்லாதிருந்தபோது, இவரின் இரண்டாவது மனைவியான ஹாஜர்
அவர்களின் மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது.
அந்த குழந்தைக்கு  “இஸ்மாயில்” என பெயரிடப்பட்டது.  அந்த குழந்தையின் வழி வந்தவர்கள்தான் இன்றைய
அராபியர்கள்.  இஸ்மாயில் பாலகன் பருவத்தை  எட்டியிருந்தபோது, அவரை தனக்கு பலியிடுமாறு அல்லாஹ் ,
இப்ராஹிமின் கனவில் வந்து கட்டளையிட்டான்.
இதனைப்பற்றி, மகன்  இஸ்மாயிலிடம் கூறிய  அவரது பெற்றோர், இஸ்மாயில் அனுமதியுடன்  அவரை பலியிட துணிந்தபொழுது “ஜிப்ரீல்” எனப்படும் வானவரை அனுப்பி அல்லாஹ் அதை தடுத்தார் என்பது ஐதிகம்.
மேலும், இஸ்மாயிலுக்கு பதில் ஒரு  ஆட்டை இறக்கி வைத்து,  அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு
இப்ராஹீம்  கட்டளையிட்டார்.
இச்சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த தியாகத்தை நினைவுகூறும் வகையிலேயே இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு,மாடு,ஒட்டகம் முதலியவற்றை  அல்லாஹ்வின் பெயரால் பலியிட்டு வருகின்றனர்.

பின்னர் பலியிட்ட ஆட்டின் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரிக்கின்றனர். முதல் பங்கை உறவினர்கள்
மற்றும் நண்பர்களுக்கும், இரண்டாவது பங்கை ஏழைகளுக்கும் , மூன்றாவது பங்கை தங்களுடைய தேவைக்கு என பிரித்து பங்கிட்டு கொடுக்கின்றனர்.
இவ்வாறு பலியிடப்படும் ஆடுகள் ஊனம் இல்லாமலும் , ஒரு வருடம் பூர்த்தியடைந்ததாகவும் இருக்கவேண்டும்.
தியாகத்திருநாளின் முக்கிய அம்சம் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்படுவதாகும். பெரும்பாலும் இந்த தொழுகை திடல் போன்ற  திறந்த வெளிகளிலேயே நடத்தப்படுகின்றன. இந்நாளில் இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து இத்தொழுகைகளில் கலந்துகொண்டு பிரார்த்திப்பது வழக்கம்.
இப்பண்டிகை ஒவ்வொரு வருடமும் அராபிய மாதம் ‘துல்ஹஜ்’ 10 ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது. வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில்  ஐந்தாவது கடமையாகும்.
ஹஜ் செய்வது என்பது புனித பயணமாக  ‘ மெக்கா ‘ செல்வதாகும்.
இப்புனிதப் பயணக் கடமைகளில் கடைசியானது அல்லாஹ்விற்க்காக பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் 10 ஆம் நாள் நடைபெறும். இது பெருநாள் தொழுகை நடைபெற்ற பின்னர் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் என  பலியிட்டு பங்கிட்டு கொடுக்கப்படுகிறது. இப்பண்டிகை தியாகத் திருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்று  அழைக்கப்பட்டாலும் , தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை  அடிப்படையாகக்கொண்டு பக்ரித், (அதாவது பக்ரு-ஆடு+ஈத்-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகிறது.

More articles

Latest article