சென்னை:

பாகுபலி-2 படத்தை கர்நாடகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து இன்று நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போராட்டமும் நடைபெற்றது.

இதற்கிடையில்  பாகுபலி இயக்குநர் ராஜமவுளி, 9 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்சினையை தற்போது கிளப்பு ஏன் என்றும், இதனால் படத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து நடிகர் சத்யராஜ் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்ட உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது,

9 ஆண்டுகளுக்கு கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அது தொடர்பாக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது. தமிழ் திரைத்துறை சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. எல்லோரும் இதனை எதிர்த்து பேசினார்கள். அதில் நானும் ஒருவன். அதே வேளையில் கர்நாடகாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கர்நாடக திரைப்பட கலைஞர்களும் ஆவேசமாக பேசினார்கள்.

நான் பேசிய வார்த்தை கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தியதாக நான் அறிந்தேன். நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல.

என்னுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக இருப்பவரின் தாய் மொழி கன்னடம்தான்.

கடந்த 9 ஆண்டுகளில் பாகுபலி பாகம்-1 உட்பட நான் நடித்த சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகத்தில் வெளியாகியுள்ளன. எந்தப் பிரச்சனையும் வரவில்லை. சில கன்னடப் படங்களில் நடிக்கவும் என்னை அனுகினார்கள். நேரமின்மையால் நடிக்க இயலவில்லை.

ஒன்பது வருடங்களுக்கு முன்னாள் நடந்த அந்த கண்டனக் கூட்டத்தில் நான் பேசிய அந்த வீடியோ பதிவை யூ ட்யூப்பில் பார்த்ததால், நான் பேசிய வார்த்தைகளால் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள தமிழ் உணர்வாளர்களுக்கும் தமிழக மக்களுக்கும் என் ஆதரவாளர்களும் என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு சிறிய விளக்கம்.

பாகுபலி என்ற மிகப் பெரிய படத்தில் மிகச் சிறிய தொழிலாளிதான் நான். ஒருவனின் பெயரை பொருட்டு சொற்களைப் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பும் பணமும் விரயமாவதை நான் விரும்பவில்லை.

அதுமட்டுமல்லாமல் கர்நாடகத்தில் வெளியிட பாகுபலி இரண்டாம் பாகம் வாங்கிய விநியோ கஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு எனக்கு உள்ளது.  இதனை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைய டுவிட்டரில் இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ள விளக்கத்தின் மூலம் தெளிவாகத் தெரியும்.

ஆனாலும், இனி வரும் காலங்களில் தமிழ் ஈழ மக்களின் பிரச்சனையானாலும் சரி, காவிரி நதிநீர் பிரச்சனையானாலும் சரி, விவசாயிகள் பிரச்சனையானாலும் சரி, தமிழக மக்களின் நலன் சார்ந்த அனைத்து நியாயமான பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை தெள்ளத் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.

இப்படி நான் கூறுவதால், இந்த சத்தியராஜை வைத்து படம் எடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவு செய்து இந்த சாதாரண சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தங்கள் செய்ய வேண்டாம், என்னால் நஷ்டம் அடைய வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதை விட இறப்பதைவிட எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும் இறப்பதும்தான் எனக்கு பெருமை. மகிழ்ச்சி. எனது மனப்பூர்வ மான வருத்தத்தை ஏற்றுக் கொண்டு பாகுபலி 2ம் பாகத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என் உணர்வுகளை புரிந்து கொண்டு எனக்கு உறுதுணையாய் நின்ற தமிழக மக்கள், தமிழ் உணர்வாளர்கள், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் எனது நலம் விரும்பிகள் என அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பொறுத்துக் கொண்ட இயக்குநர் ராஜமௌலி, பிரசாத் மற்றும் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.