ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி லோட்டஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் பெயரில் ரஜினியின் சொந்த தயாரிப்பில் 2002 ம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் இருபது ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் மெருகேற்றப்பட்டு ரிலீசுக்கு தயாராகிறது.

திரையிட்ட சீக்கிரத்தில் தியேட்டரை விட்டு பெட்டிக்கு திரும்பிய நூற்றுக்கணக்கான தமிழ் படங்களில் பாபா-வும் ஒன்று என்றே சொல்லவேண்டும்.

பொதுவாக ரஜினிகாந்த் படங்கள் என்றாலே வசூலில் நல்ல சாதனை படைக்கும் என்றபோதும் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதையும் மீறி படம் காட்டிய தியேட்டர்களின் திரைகள் கிழிக்கப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு முன் வந்த ரஜினியின் எவர்க்ரீன் ‘நெற்றிக்கண்’ தொடங்கி எஜமான், வீரா, முத்து என்று எத்தனையோ வெற்றிப்படங்கள் இருக்க ‘பாபா’ படத்தை ரீ ரிலீசுக்கு தேர்வு செய்தது அவரது ரசிகர்கள் மட்டுமன்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

1999 ம் ஆண்டு வெளியான படையப்பா படத்திற்குப் பிறகு படங்களில் நடிக்கப்போவதில்லை என்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடித்த பாபா படம் வெளியான பிறகு, ரஜினி இதற்குப் பிறகு படங்களில் நடிப்பது தேவையா ? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் அதற்கு அடுத்து வந்த சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் போன்ற படங்கள் சூப்பர் ஸ்டாரின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களாக அமைந்ததோடு அவருக்கு விருதுகளும் வாங்கித்தந்தது.

அதன் பிறகு வந்த கோச்சடையான், லிங்கா ஆகிய படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்களுடன் எதிர்ப்புகளும் பறந்து வந்ததால் வந்த சீக்கிரத்தில் படத்தை திரையிடுவதை நிறுத்தி சமாதானத்தில் இறங்கினர் விநியோகிஸ்தர்கள்.

2016 ம் ஆண்டு கபாலி படத்தின் வெற்றியும் தமிழகத்தில் அரசியல் வெற்றிடமும் ஒருசேர வந்ததை அடுத்து தனது அடுத்தடுத்த படங்களை அரசியல் ஸ்டண்ட் அடித்து ஓடவைத்தார் ரஜினி.

முழுநேர அரசியலில் இறந்குவார் என்று அவர் வரவேண்டிய நேரமிது என்று எதிர்பார்த்து காத்திருந்த ரஜினி ரசிகர்கள் மத்தியில் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலையில்லை’ என்று பட்டும் படாமல் அரசியல் செய்துவந்தார்.

பின்னர், அரசியலுக்கு வராமலேயே அரசியலுக்கு முழுக்கு போடப்போவதாக அறிவித்த ரஜினிகாந்த் தற்போது அமானுஷ்யங்களுடன் அரசியல் நெடி வீசும் பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்வது அவரது வெற்றிப்பட கவுண்ட்-டை அதிகரிக்கும் புதிய சூத்திரமா ?

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில் மீண்டும் அரசியல் குறித்து பேசினால் மக்களிடம் எடுபடுமா என்ற சந்தேகம் அவருக்கும் அவரை அரசியலுக்குள் சிக்க வைக்க நினைப்பவர்களுக்கும் உள்ள நிலையில் ஆன்மீக அரசியல் படமான பாபா-வை தேர்ந்தேடுத்திருப்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருப்பதுடன் ரஜினியின் பாதை சிங்கப்பாதையாக மாறுமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.