ஆசிய விளையாட்டுப் போட்டி : நீரஜ் சோப்ரா இந்தியாவின் கொடியை ஏந்தி செல்வார்

இந்தோனேசியாவில் நடைபெற இருக்கும் ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா தேசிய கொடியை ஏந்தி செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க நாளில் 20 வயதான நீரஜ் சோப்ரா இந்திய கொடியை ஏந்திச் செல்வார் என்று இந்திய ஒலிம்பிச் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்துள்ளார்.

Neeraj-Chopra

ஆசிய விளையாட்டுப்போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகர்த்தா மற்றும் பாலெம்பங்கில் நடைபெற உள்ளது. இம்மாதம் 18 தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் நாடுகள் தங்களது தேசிய கொடியை ஏந்தியப்படி வீரர், வீராங்கனைகள் குழுக்களுடன் அணிவகுத்து செல்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆசிய போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேசிய கொடியை ஏந்தியபடி வீரர்களை அணிவகுத்து செல்வார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து நீரஜ் சோப்ரா கூறுகையில் “ இது எனக்கு மிகப்பெரிய பெருமையாகும், இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் தற்போது மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளேன் “ என கூறினார்.

இந்தியா சார்பில் 36 விளையாட்டு போட்டிகளில் 572 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர் என இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.