ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் இலங்கை – வங்கதேசம் மோதல்

14வது ஆசிய கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்க தேச அணிகள் மோத உள்ளன.

asia

ஐக்கிய அரபு எமிரேட்சில் 14வது ஆசியக்கோப்பை கிரிகெட் தொடர் நடைபெற உள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. ஐசிசியின் முழு நேர உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் நேரிடையாக தொடரில் பங்கேற்க அனுமதி பெற்றன.

இவற்றை தவிர, தகுதி சுற்றுக்கான போட்டியில் வெற்றிப்பெற்ற ஹாங்காங் அணி ஆறாவது அணியாக தொடரில் இடம்பெற்றது. இந்த தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் களமிறங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் பாக்கிஸ்தான் அணி இந்திய வீரர்களுக்கு கடும் சவால் விடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியா – பாக்கிஸ்தான் இடையிலான போட்டி வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடர் கூறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “ குறிப்பாக இந்தியாவிற்கு வெளியே சமீப காலமாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளோம். உலகக்கோப்பைக்கு முன் இந்த தொடர் மிகப்பெரிய வாய்ப்பு. வீரர்களின் செயல்பாட்டை மதிப்பிடவும், சரியான பேலன்ஸ் அணியை கண்டறியவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். உலகக்கோப்பைக்கு இன்னும் நாட்கள் உள்ளன. அதற்கு முன் நாங்கள் ஏராளமான போட்டியில் விளையாட வேண்டியுள்ளது.

தனிப்பட்ட முறையில் நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு அணியும் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் களம் இறங்கும். ஒவ்வொரு அணியும் தங்களது சாதகம் மற்றும் பாதகம் ஆகியவற்றை கணக்கில் வைத்துதான் களம் இறங்கும். இந்த தொடர் எளிதாக இருக்காது. முதன்முறையாக ஒரு முழுத்தொடருக்கு கேப்டனாக செல்ல இருக்கிறேன். இது மிகவும் உற்சாகமாக உள்ளது “ என்று கூறினார்.

இந்நிலையில் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளை ஒப்பிடும் போது மற்ற அணிகள் பலம் குறைந்த அணிகளாக பார்க்கப்பட்ட போதும், இலங்கை , வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் கடும் சவால் அளிக்கலாம் என தெரிகிறது. இந்த அணிகள் சுலபமாக வெற்றியை விட்டுத்தராது. தவிர, ஹாங்காங் அணி ஒரு போட்டிலாவது வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால், திடீர் திருப்பத்துக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-