“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார் என்று அழைக்கப் படும் இராமலிங்க அடிகளார் நினைவு தினம் இன்று. 

ஆன்மிகவாதியான இவர், சத்திய ஞான சபையை நிறுவியவர். சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்.

ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள்.

1823 ம் ஆண்டு அக்டோபர்  மாதம் 5ம் தேதி  இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக பிறந்தவர்.  சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.

பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும்.

மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும்.  எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு மாவான்.

வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும்.

இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.

மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது.

வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

இராமலிங்க அடிகள் கொள்கைகள்
கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
புலால் உணவு உண்ணக்கூடாது.
எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
மத வெறி கூடாது .

இன்று வள்ளலார் நினைவு தினம் (ஜனவரி 30, 1874). வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றி நல்வழியில் வாழ உறுதியேற்போம்.