டெல்லி:

மாட்டு இறைச்சி பிரச்னையால் இதர முக்கிய பிரச்னைகள் புறணிக்கப்பட்டுள்ளது என்று அருணாச்சல பிரதேச முதல்வர் பேமா கண்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘மாட்டு இறைச்சி மட்டுமே அரசியல் பிரச்னை கிடையாது. இதனால் வடகிழக்கு பகுதிக்கு அவசியமான இதர விஷயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கடந்த ஜனவரி மாதம் பாஜக.வில் இணைந்த இவர் மேலும் கூறுகையில், ‘‘மத்திய சுற்றுசூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற துறை சார்பில் இறைச்சிக்காக கால்நடை விற்பனை செய்வது தொடர்பாக விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் பெரிய அளவில் பேசப்ப்டடு வருகிறது’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘இந்த புதிய அறிவிப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார். மத்திய சுற்றுசூழல், வனத்துறையின் அமைச்சகத்தின் புதிய அறிவிப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும். மாநில அரசுகள், கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அசைவ பிரியர்கள். அவர்கள் மாட்டு இறைச்சி உள்ளிட்ட இதர இறைச்சிகளை உண்ணும் பழக்கம் உடையவர்கள். மேலும், பன்றி இறைச்சி இந்த பகுதியில் அதிக பிரபலம்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘வடகிழக்கு பகுதியில் மாட்டு இறைச்சி மட்டுமே அரசியல் பிரச்னை கிடையாது. மாநிலத்தில் இன்னும் சாதிக்க வேண்டிய விஷயங்களை மாட்டு இறைச்சி பிரச்னை திசை திருப்புகிறது. மாட்டு இறைச்சி போன்ற பல சமூகம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வடகிழக்கு பகுதியில் பாஜக.வின் வளர்ச்சி காரணமாக எவ்வித கலாச்சார இடைவெளியும் ஏற்படாது’’ என்றார்.

பேமா கண்டு தொடர்ந்து கூறுகையில், ‘‘இதர பகுதிகளை விட இந்த பிராந்தியத்தில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார். மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த பகுதிகளை பார்வையிடுகிறார்கள். அமைச்சர்கள் இங்கே ஒரு இரவு தங்கினால் அனைத்து மத்திய அரசு அதிகாரிகளும் அங்கே இருக்க வேண்டும். இதன் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்’’ என்றார்.

‘‘2016ம் ஆண்டு ஜூலையில் முதல்வராக பதவி ஏற்றபோது நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன். அப்போது நானும், முன்னாள் முதல்வர் நபம் துக்கி மற்றும் மாநில தலைவருடன் டெல்லி சென்று ராகுல்காந்தியை சந்திக்க சென்றால், மூன்று நாட்கள் கழித்து தான் சந்திப்பு நடக்கும் என்று தகவல் வரும். அப்போது பிரதமரை சந்திக்கு பல நடைமுறைகள் இருந்தது.

ஆனால் தற்போது நான் ஒரு போன் செய்தால் அடுத்த 15 நிமிடங்களில் பிரதமர் மோடியை சந்திக்க முடியும். வடகிழக்கு மாநிலங்களுக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் இதன் மூலம் தெரிய வரும். அதனால் அரசியல் பிரச்னைகளை நமக்கு பின்னால் தள்ள வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,‘‘ அருணாச்சலுக்கு இணைப்பு ஒரு பிரச்னையாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரெயில் போக்குவரத்து தொடர்பான சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டத்தை அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உத்தரவிட்டுள்ளார்.

அருணாச்சல் ஒரு அழகிய மாநிலம். இங்கு சுற்றுலா தான் முதன்மை காரணி. இதனால் இங்கு பல ஹெலிபேடுகள் அமைக்கப்ப்டடுள்ளது. இதனால் இணைப்பு என்பது தற்போது ஒரு பிரச்னை இல்லை’’ என்றார்.