சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்த நிலையில், நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆணைய தலைவர் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து, அதிமுக இரண்டாக உடைந்த நிலையில், தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், ஜெ.மரணத்தின் மர்மம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் பலரும் விசாரணை கோரினர். இதையடுத்து, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.   2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி அப்போதைய முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஆணையம் அமைக்க  உத்தரவிட்டர்.  இதைத்தொடர்ந்து ஆணையத்தின் காலம் பல்வேறு கட்டங்களை நீட்டிக்கப்பட்டது. இந்த ஆணையம்,  ஜெயலலிதா வின் உதவியாளர்கள் அவருடன் உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ நிர்வாகம், டாக்டர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இடையில் அப்போலோ நிர்வாகத்தின் உச்சநீதிமன்ற வழக்கால் மேலும் தாமதமானது.

இதற்கிடையில் ஆட்சி மாறியதும், திமுக அரசும் ஆணையத்துக்கு அவகாசம் வழங்கியது. இதையடுத்து  விசாரணை முடிவடைந்து விரிவான அறிக்கை தயாரிக்கும் பணியில் நீதிபதி ஆறுமுகசாமி ஈடுபட்டு வந்தார்.  தற்போது இந்த பணியும் முடிவடைந்துள்ளது.  இதையடுத்து ஆணையத்தின் அறிக்கையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நாளை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.