டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரிய வழக்கில் வரும் 29ம் தேதிக்குள் பதிலளிக்க யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காரணமாக மார்ச் மாதத்திலிருந்து நாட்டில் அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. எந்தத் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் , பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
தொடர்ந்து செப். மாதம் பல்கலைக்கழக மற்றும் கல்லூரித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் எழுந்தது.
ஆகையால் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந் நிலையில் இது தொடர்பான மனுக்கள் மீது 29ம் தேதிக்குள் பதிலளிக்க யுஜிசிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.