டெல்லி: நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 106 பேரை கைது செய்துள்ள நிலையில், என்ஐஏ இயக்குநருடன் உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீதான சர்ச்சைகள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகின்றன. இதனால் அந்த அமைப்பினரை கண்காணித்தல், சோதனையிடுதல், கைது செய்தல் என மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து நேற்று நள்ளிரவுமுதல்  நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பிற்குச் சொந்தமான இடங்கள்,வீடுகளில் என்ஐஏ சோதனை  நடைபெற்றது. தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில், தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய 106பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக,  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அவருடன்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை செயலாளர், என்.ஐ.ஏ பொது இயக்குநர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  இதில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்தியாவில் நிலவி வருகின்றன. இவற்றுக்கு கத்தார், குவைத், துருக்கி, சவுதி அரேபியா ஆகிய மேற்கத்திய நாடுகளில் இருந்து முறைகேடான வகையில் நிதி பரிமாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் மற்றும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தவறான செயல்களில் ஈடுபடுத்தவும் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.