சென்னை,

2ஜி வழக்கு குறித்து முன்னாள் திமுக தொலைதொடர்பு அமைச்சர் ராஜா எழுதியுள்ள புத்தகத்தால், திமுக காங்கிரஸ் இடையே உள்ள கூட்டணி முறிய வாய்ப்பில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

மேலும், திமுக – காங். கூட்டணி முறியும் அளவுக்கு 2ஜி புத்தகத்தில் ஆ.ராசா எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது, திமுகவை சேர்ந்த ராஜா, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விதியை மீறி 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கிய தாகவும், அதன் காரணமாக 2,76,000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் சிஏஜி அளித்த அறிக்கையை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன் காரணமாக ராஜா, கனிமொழி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி 2ஜி வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று அனைவரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், 2ஜி குறித்து ராஜா புத்தகம் ஒன்றை எழுதி வந்தார்.  `2G SAGA Unfolds’ என்ற  இந்த புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய ராஜா, இந்தப் புத்தகத்தை எந்த அரசியல் கண்ணாடியும் இல்லாமல் அணுகுங்கள். அப்போதுதான் 2ஜி வழக்குக் குறித்து முழுமையாக புரிந்துக் கொள்ள முடியும். என் தரப்பு நியாயங்களையும் உங்களால் உணர முடியும்” என்று கூறினார்.

இந்த புத்தகத்தில், தான் தொலைத்தொடர்பு தொழில் நுட்பத்தையும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் எளிய மனிதர்களிடம் கொண்டு போய் சேர்க்க நினைத்தேன்… அதற்காக, அனைத்து சட்டத்திட்டங்களையும் மதித்து டிராய் பரிந்துரையின் பெயரில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தேன், சி.டி.எம்.ஏ தொழிற்நுட்பத்தில் இயங்குபவர்கள் ஜி.எஸ்.எம் தொழில்நுட்பத்தில் இயங்கவும், அதுபோல ஜி.எஸ்.எம் இல் இயங்குபவர்கள் சி.டி.எம்.ஏ வில் இயங்கவும் அனுமதித்தேன். இது பல பெரும் நிறுவனங்களை கோபமடைய வைத்தது என்றும், மேலும்  பெருநிறுவனங்களின் சண்டையின் காரணமாகவே தாம் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாக கூறும் ராசா, காங்கிரஸும் தன்னை காக்க தவறிவிட்டது என்று பர்வேறு குற்றச்சாட்டுக்களை மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் மீதும்  குற்றம் சாட்டி உள்ளார்.

ராஜாவின் புத்தகம் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்படக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜாவின் புத்தகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ராஜாவின் புத்தகத்தால் இரு கட்சிகளுக்கு இடையே எந்த பிரச்சினையும் எழாது என்றும்,  கூட்டணி முறிய வாய்ப்பில்லை என்றும் கூறினார்.