டில்லி:

ஏர் இந்தியா பங்குகள் விற்பனை செய்யப்படுவதற்கு முன்பு 4 நிறுவனங்களாக பிரிக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘இந்த விற்பனை தொடர்பான நடைமுறைகள் 2018ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும். விற்பனைக்கு முன் ஏர் இந்தியாவின் முக்கியமான கடன்களை அரசு ஏற்கும். ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தரையில் கையாளும் பிரிவு, உள்ளூர் விமான சேவையை கையாண்ட அலையன்ஸ் ஏர், பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம், முற்றிலும் பழுது நீக்கம் (எம்ஆர்ஓ) என ஏர் இந்தியா விற்பனைக்கு முன்பு 4 நிறுவனங்களாக பிரிக்கப்படும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இதில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஒரே நிறுவனமாக விற்பனை செய்யப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்’’ என்றார்.

இந்தியாவின் விமான நிறுவனமான ஏர் இந்தியாவில் ஏற்பட்ட தொடர் நஷ்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எனினும், 2016-17ம் நிதியாண்டில் இதன் கடன் 48 ஆயிரத்து 876 கோடி ரூபாயாக இருந்தது. 10 ஆண்டுகளாக லாபம் ஈட்டவில்லை. 2017-18ம் ஆண்டில் இதன் இழப்பு 3 ஆயிரத்து 579 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஏர்இந்தியாவை அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இதன் கடன் நிலையானது அல்ல என்று நிதி ஆயோக் கடந்த மே மாதம் தெரிவித்தது. முன்னதாக விமான போக்குவரத்து து¬¬யில் வெளிநாட்டு நிறுவனங்கள் 49 சதவீதம் வரை முதலீடு செய்யலாம் என்று மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரி 10ம் தேதி விதிமுறைகளை தளர்த்தியது.

49 சதவீதம் என்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிகரிக்க கூடாது. விமான நிறுவனங்களின் உரிமையும், கட்டுப்டுத்தும் அதிகாரமும் இந்தியர் வசம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தது. மேலும், மத்திய அரசு 40 சதவீதமும், மீதமுள்ள 11 சதவீத பங்குகளை இந்தியர் வசம் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.