அமீரகத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் உடல்களை கொண்டு வர சலுகை கட்டணம் ரத்து

அபுதாபி:

ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்கும் இந்தியர்களின் உடல்களை நாட்டிற்கு கொண்டு வர ஏர் இந்தியா விமானத்தில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்பட்டது. இந்த தள்ளுபடியை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. அதோடு உடல்களுக்கு சரக்கு கட்டணம் விதிக்கப்படமால் இருந்தது. இதையும் கடந்த 19ம் தேதி முதல் ஏர் இந்தியா ரத்து செயதுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மட்டுமே ஏர் இந்தியா இந்த சலுகைகளை வழங்கி வந்தது.

இந்நிலையில், அமீரகத்தில் இருந்து சென்னை மற்றும் ஐதராபாத்துக்கு உடல்களை கொண்டு செல்ல ஒரு கிலோவுக்கு ரூ.537, கோலிகோட்டிற்கு ரூ.569, கொச்சிக்கு ரூ.574, மும்பைக்கு ரூ.327, டில்லிக்கு ரூ.377 என கட்டணம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தால் வசூல் செய்யப்படவுள்ளது. 50 சதவீத தள்ளுபடியை ஏர் இந்தியா ரத்து செய்தது சமூக நல ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்களின் உடல்களை அனுப்பும் சேவை செய்து வரும் ஆர்வலர் அஷ்ரப் தமரசேரி என்பவர் கூறுகையில்,‘‘இந்த அறிவிப்பு வருத்தமளிக்கிறது. நியாயமற்ற செயலாகும். ஸ்பைஸ் ஜெட், ஏர் அரேபியா போன்ற விமான நிறுவனங்கள் ஏர் இந்தியாவை விட குறைவான கட்டணம் வசூலிக்கின்றன.

ஆனால், அந்நிறுவன விமானங்கள் பல நகரங்களுக்கு செல்வது கிடையாது. ஏர் இந்தியா மட்டுமே பல நகரங்களுக்கு செல்கிறது. எத்தியாட் மற்றும் ஏர் அரேபியா விமான நிறுவனங்களுக்கு உடல்களுக்கு கிலோ கணக்கில் கட்டணம் வசூலிப்பது கிடையாது. குறிப்பிட்ட தொகையை உடல்களுக்கு நிர்ணயம் ªச்துள்ளன. அதே சமயம் பாகிஸ்தான், பங்களாதேஷ் அரசு விமான நிறுவனங்கள் உடல்களுக்கு கட்டணம் வசூலிப்பது கிடையாது. இலவசமாக கொண்டு செல்கின்றன’’ என்றார்.

தற்போது வசூலிக்கப்படவுள்ள புதிய கட்டணத்தால் எந்த வகையான பாதிப்பு ஏற்படும் என்று அஷ்ரப் கூறுகையில்,‘‘உதாரணமாக 80 கிலோ எடை கொண்ட ஒருவரது உடலை கொண்டு செல்ல, 70 கிலோ பெட்டி தேவைப்படும். இதை சேர்த்தால் 150 கிலோவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இது தவிர உடல் எம்பார்மிங், ஆம்புலன்ஸ் கட்டணம், இறப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கு கூடுதல் செலவாகும்.

இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு உடலை கொண்டு செல்ல ரூ.1.5 லட்சம் செலவாகும். இது சாதாரண மக்களை பாதிக்கும். இதை சாதாரண குடும்பத்தினர் எப்படி சமாளிப்பார்கள். குறிப்பாக நீண்ட நாட்கள் சம்பளம் வழங்கப்படாத தொழிலாளர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். சம்பள பிரச்னை என்பது அமீரகத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக உள்ளது’’ என்றார்.

இது குறித்து அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி கூறுகையில்,‘‘பொதுவாக உடல்களை அனுப்பும் முழு செலவையும் வேலை அளித்த நிறுவனங்கள் தான் ஏற்கும். அவர்கள் செலவை ஏற்க தவறினாலோ?, அல்லது குடும்பத்தினரின் இயலாமை இருந்தாலோ? இதற்கான கட்டணத்தை இந்திய மிஷினரிகள் நடத்தும் இந்தியர் சமுதாய நல நிதி மூலம் செலுத்தப்படும். ஏர் இந்தியாவின் இந்த முடிவை எதிர்த்து டில்லியில் உள்ள அந்நிறுவன அலுவலகத்தின் முன்பு வரும் 2ம் தேதி 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்நடத்தப்படும் என்று அஷ்ரப் தெரிவித்தார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Air India cancels discount on repatriation of bodies from UAE, அமீரகத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் உடல்களை கொண்டு வர சலுகை கட்டணம் ரத்து
-=-