சென்னை: உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர்,20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்,40 ஊராட்சி தலைவர்கள்,436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள்,மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள்,இரண்டு நகராட்சி கவுன்சிலர்கள் ,8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட மொத்தம் 510 பதவியிடங்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த பதவிகளுக்கு போட்டியிடுவதில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அதிமுகவிலோ தலைமைகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கட்சியின் சின்னம் இரட்டை இருக்கும் நிலையில், தலைவர்களுக்கு இடையே எழுந்துள்ள மோதல் காரணமாக அவர்கள்  சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில்,  இது தொடர்பாக நேற்று ஓபிஎஸ் அவர்கள் ஈபிஎஸ்-க்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில்,”உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக ‘பார்ம் ஏ மற்றும் பார்ம் பி’ ஆகியவற்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார் எனவும், ஆனால் அந்த கடிதம் ஈபிஎஸ் அவர்களால் நிராகரிக்கப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுவில் உள்ள FormA மற்றும் FormB ஆகியவற்றில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாமல் உள்ளதால் அதிமுக வேட்பாளர் களுக்கு  இரட்டைஇலை சின்னம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால்,  மாநகராட்சி நகராட்சி மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் போட்டியிடாமல் அதிமுக புறக்கணித்துள்ளது.

இதில் பதவிகளில் 34 பதவிகளுக்கு மட்டும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம்  இன்று மாலை சின்னங்களை ஒதுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.