நெய்வேலி: பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, என்எல்சி நிர்வாகம், தமிழ்நாடு காவல்துறை உதவியுடன்  நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அரசியல்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அங்கு போராட்டம் நடத்திய புனவகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணி நேற்று காலை துவங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், எதிர்ப்பை மீறி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட  போலீஸ் பாதுகாப்புடன்  என்எல்சி நிறுவனம், இயந்திரங்களைக் கொண்டு நிலங்களை சமன்படுத்தியது.

என்என்சிக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டும் பாமக, நாளை (10ந்தேதி) கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்து உள்ளது. இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

இந்த நிலையில், என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வளையமாதேவி கிராமத்திற்க்கு புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் சென்றார். அப்போது, அவரை அங்கு பாதுகாப்புக்கு இருந்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் மேலும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.