மீண்டும் ஒரு கதைத் திருட்டு புகார்: “திமிரு புடிச்சவன்” இயக்குநர் மீது பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் குற்றச்சாட்டு!

காலம்காலமாகவே கதைத்திருட்டுப் புகார் என்பது தமிழ்த்திரையுலகில் காலம்காலமாகவே உண்டு. ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் புண்ணியத்தில் (!) இத்திருட்டு “புகழ்” பெறத்துவங்கியது. இவர் இயக்கிய கத்தி, சர்கார் உள்ளிட்ட படங்கள் மீது திருட்டு புகார் எழுந்து பெரும் பஞ்சாயத்தானது.

தொடர்ந்து 96 படமும் இந்த  திருட்டு சர்ச்சையில் சிக்கியது.

இப்போது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருக்கும் திமிரு புடிச்சவன் படமும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

கணேஷா – விஜய் ஆண்டனி

ஆம்.. பிரபல தமிழ் திகில் கதை  எழுத்தாளரான ராஜேஷ்குமார் நேற்றைக்கு ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் கதை தன்னுடையது என்று தெரிவித்துள்ளார்.

இது பற்றி தன்னுடைய  முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ““இவர்கள் திருந்தவே மாட்டார்களா…?

சென்ற வருடம் நான் oneindia-வில் எழுதிய ஆன் லைன் தொடர் ‘ஒன்+ஒன் = ஜீரோ’ தொடர் கதையின் அடிப்படை கருவான 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை Brian wash செய்து தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தேன்.

அந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து ‘திமிரு பிடித்தவன்’ திரைப்படத்தை எடுத்துள்ளார்கள்.

இவர்கள் எப்போது திருந்துவார்கள்..?” என்று வருத்தத்துடன்  பதிவிட்டுள்ளார்.

ராஜேஷ்குமார்

‘திமிரு புடிச்சவன்’ படம் நேற்றுதான்  வெளியானது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், நிவேதா பெத்துராஜ் நாயகியாகவும் நடித்துள்ளனர். கணேஷா என்கிற இயக்குநர் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

ராஜேஷ்குமார் பதிவு

ராஜேஷ்குமாரின் இந்தக் கதைத் திருட்டு புகார் பற்றி இயக்குநர் கணேஷாவிடம்  கேட்டபோது, “அப்படியா… நான் ராஜேஷ்குமாரின் அந்த தொடரை  படிக்கவே இல்லை. இரண்டு கதைகளின் கருவும் ஒரே மாதிரி அமைந்திருப்பது  எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. மற்றபடி திமிரு புடிச்சவன் கதை  நான்  எழுதியது. பல வருட போராட்டத்துக்குப் பிறகு,  இப்போதுதான் எனக்குப் பெயர் கிடைக்கும் அளவுக்கு ஒரு படம் அமைந்திருக்கிறது.  இந்த நேரத்தில் இது போன்ற சர்ச்சை கிளம்புவது  வருத்தமாக இருக்கிறது ..” என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Again a story theft: writer  Rajesh Kumar complained against   thimiru pudichavan film director, மீண்டும் ஒரு கதைத் திருட்டு புகார்: “திமிரு புடிச்சவன்” இயக்குநர் மீது பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் புகார்!
-=-