டெல்லி: மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்ததாக பிரியங்கா காந்தி தலைமையில் மாநில தலைநகரங்களில்  மகிளா மார்ச் (மகளிர் பேரணி ) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும், மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுதும் நோக்கத்திலும்,  இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல் காந்தி தலைமையில் பாத யாத்திரை நடத்தப்படுகிறது. அதன்படி,  கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ தூரம் ராகுல் காந்தி தலைமையில் செப்டம்பர் 7ம் தேதி முதல் காங்கிரசார் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.  150 நாட்கள் நடைபெறும் இந்த பாத யாத்திரை இன்று 89வது நாளாக ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அடுத்த யாத்திரைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் மாநில தலைநகரங்களில் 2 மாதம் மகளிர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த  காங்கிரஸ்  எம்.பி. கே.சி.வேணுகோபால், வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் எங்களது கட்சி சார்பில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி நடத்தப்படும். இந்த மகளிர் பேரணி 2 மாதங்களுக்கு நடைபெறும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடையும்போது, அதன் தொடர்ச்சியாக, பிரியங்கா காந்தியின் மகளிர் பேரணி தொடங்கி நடைபெறும் என தெரிவித்தார்.