டில்லி

ரடங்கு அமுலாக்கம் நடந்து ஒரு மாதமாக டில்லியில் ரேஷன்  பொருட்கள் வழங்காததால் மக்கள் கடும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் டில்லியில் நேற்று வரை 13.72 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 12.75 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது சுமார் 78000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  கொரோனாவை கட்டுப்படுத்த டில்லி அரசு கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது.

டில்லி மக்களின் சுமார் 37% மக்கள் ரேஷன் திட்டத்தின் கீழ் வருகின்றனர்.  ஊரடங்கு ஆரம்பம் முதல் டில்லியில் ரேஷன் பொருட்கள் வழங்கல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.   அதாவது போன மாதம் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய பாக்கி மக்களுக்கும் மற்றும் மே மாதம் அனைத்து மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

இது குறித்து தெற்கு டில்லியில் உள்ள மக்கள், “டில்லி முதல்வர் எங்களிடம் ஊரடங்கு தொடங்கிய போது எங்களிடம் சிறிது காலம் பொறுமையாக இருக்கச் சொன்னார்.  ஆனால் இரண்டு வார ஊரடங்கு தற்போது ஒரு மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.   இன்னும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை,.

அவர்கள் தற்போது எதற்கு காத்திருக்கின்றனர்?  எங்களுக்கு உணவு அளிக்க முடியாத நிலையில் அவர்கள் ஏன் எங்களை பொறுமையுடன் இருக்க சொல்ல வேண்டும்? என கேள்விகள் எழுப்பி உள்ளனர்.   இது குறித்து சில செய்தியாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகிய போது அவர்களுக்கு பதில் அளிக்க மறுக்கப்பட்டுள்ளது.