ஹீமாவின் ஆங்கிலம் குறித்த விமர்சனத்துக்கு  இந்திய தடகள சம்மேளனம் மன்னிப்பு

20வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்    தங்கம் வென்ற ஹீமா தாஸூக்கு ஆங்கிலத்தில் புலமை இல்லை என்று விமர்சித்த இந்திய தடகள சம்மேளனம் தற்போது தனது கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ளது.

பின்லாந்தில் நடைபெற்ற இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கம் வென்றார்.  400 மீட்டர் தடகள இறுதிச் சுற்றில், பந்தய தூரத்தை 51 புள்ளி 46 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.    இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

முன்னதாக   அரையிறுதிப் போட்டி ஜூலை 12ம் தேதி நடைபெற்றது. அதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹீமாவிடம் செய்தியாளர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டனர். அதற்கு ஹீமா ஆங்கிலத்தில் பதிலளித்தார்.  அவரால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை.

 

 

இதுகுறித்து ட்விட் செய்த இந்திய தடகள சம்மேளனம், “ஹீமா அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி. இருப்பினும் அவர் ஆங்கிலத்தி சரளமாக பேசவில்லை” என பதிவிட்டிருந்தது.

இதையடுத்து சமூகவலைதளங்களில் பலரும் இந்திய தடகள சம்மேளனத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“திறமையை பாருங்கள், ஆங்கில புலமையைப் பார்க்காதீர்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனார். அவரால் இந்திய நாடே பெருமையடைந்துள்ளது” என கூறி வருகின்றனர்.

மேலும், “ ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். மொழி அறிவைவிட பொது அறிவு, திறமையே முக்கியம். பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற ஆங்கிலம் தாய்மொழியாக கொண்ட நாடுகளில் பிறக்கும் பிச்சைக்காரர்கள் கூட தெளிவாக ஆங்கிலம் பேசுவார்கள். ஆகவே ஆங்கிலம் தெரிவது மட்டுமே ஒருவரின் தகுதியை நிர்ணயிக்காது.

ஹீமா இந்தியாவில் அதிலும் அஸ்ஸாம் போன்ற பின்தங்கிய மாநிலத்தின் கிராமம் ஒன்றில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். எத்தனையோ தடைகளைக் கடந்து அவர் தங்கம் வென்று இந்தியாவின் பெருமையை பறைசாற்றியுள்ளார்.  அவரது கடின உழைப்பு, திறமையை கணக்கில் கொள்ளாமல் ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்று குறைகூறுவது மூடத்தனம்” என்றும் பலர் சமூகவலைதளங்களில் கண்டம் தெரிவித்தனர்.

இதற்கிடையே இறுதிப்போட்டியிலும் வென்று சாதனை படைத்துள்ளார் ஹீமா.

இந்த நிலையில்   இந்திய தடகள சம்மேளனம் தனது கருத்துக்காக வருத்தத்தை தெரிவித்துள்ளது.

இது குறித்த ட்விட்டர் பதிவில், “ஹீமாவின் வெற்றி பெருமைப்படத்தக்கது. அவர் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரைப் பாராட்டுகிறோம்” என்றும் தெரிவித்துள்ளது.

 
English Summary
afi-issues-apology-for-tweet-over-hima-das-english-skills/