ஹீமாட்டோலாஜிக் குறைபாடு எனும் ரத்தப் புற்றுநோய் உள்ள நோயாளிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே முதல் கட்ட கோவிட்-19 தடுப்பூசி போட்ட பின்பு நோயெதிர்ப்பு சக்தி உருவானது.

ஆனால், பூஸ்டர் டோஸ் போட்ட பிறகு அவர்களில் 56 சதவீதம் பேருக்கு ஆன்டிபாடிகள் உருவாகி இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக ‘Cancer’ மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.

ஹீமாட்டோலாஜிக் குறைபாடுகள் உள்ள 378 நோயாளிகளுக்கு கோவிட்-19 ஆரம்ப மற்றும் பூஸ்டர் தடுப்பூசிக்கான நோயெதிர்ப்பு சக்தி குறித்து பிரவுன் பல்கலைக்கழகத்தின் எம்.டி., தாமஸ் ஒல்லிலா மற்றும் அவரது குழுவினர் ஆய்வு செய்தனர்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA)- அங்கீகரித்த மூன்று கோவிட்-19 தடுப்பூசிகளில் ஏதோ ஒன்றை முதல் டோஸ் தடுப்பூசியாக போட்ட பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 181 நோயாளிகளுக்கு (48 சதவீதம்) நோயெதிர்ப்பு சக்தி உருவானது.

முதல்கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் நோயெதிர்ப்பு சக்தி உருவாகாத 85 நோயாளிகளில் 48 பேருக்கு (56 சதவீதம்) பூஸ்டர் டோஸ் போட்ட பிறகு நோயெதிர்ப்பு சக்தி உருவானதாக கூறப்படுகிறது.

மேலும், டிக்சேஜிவிமாப் (Tixagevimab) மற்றும் சில்காவிமாப் (cilgavimab) ஆகிய ஆன்டிபாடி சிகிச்சைகள் பெற்ற எந்த நோயாளிக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.