சென்னை:
திமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதுவரை எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். இதனிடையே பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்தார்.

இதனையடுத்து, வழக்கு இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொதுச்செயலாளர் வழக்கில் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்றும் அதுவரை பொதுச்செயலாளர் தேர்தலின் முடிவை வெளியிடக்கூடாது எனவும் உத்தரவிட்டார். ஆனால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நீதிபதி தடைவிதிக்கவில்லை.