ஆலையில் நிர்வாக பணிகள் மேற்கொள்ளலாம்: ஸ்டெர்லைட்டுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி

டில்லி:

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள, வேதாந்தா நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், ஆலையை இயக்க அனுமதி மறுத்துள்ளது.  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இன்றைய உத்தரவு தூத்துக்குடி மக்களிடையே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்டெர்லைட்டு ஆலையை மூடி தமிழக அரசு அறிவித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஏற்கனவே நடைபெற்ற 2 கட்ட விசாரணையின்போது,  ஆலையை திறக்க உத்தரவிட மறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம், இன்றைய உத்தரவில், ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று கூறி உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று  அந்த பகுதி  மக்கள் நடத்திய 100வது நாள் மாபெரும் போராட்டத்தின்போது,   காவல்துறையினர் நடத்திய காட்டு மிராண்டித்தனமான  துப்பாக்கி சூட்டில் 13 பேர் மரணம் அடைந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பெரும் கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின்போது, ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதை தள்ளுபடி செய்த நீதிபதிகள்,வேதாந்தா நிறுவன வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக கூறினர். மேலும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம்  என்றும் வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவாகவே  தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு கூறியது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு அனுமதி அளிப்பதாகவும்,  இறுதி தீர்ப்பு வரும் வரை ஸ்டெர்லைட் ஆலையை  இயக்க அனுமதியில்லை என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை ஆக.20க்குள் தாக்கல் செய்ய வேண்டும்  என்று  தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம்   உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமையத்தின் இன்றைய உத்தரவு, ஸ்டெர்லைட்  ஆலை மீண்டும் இயக்கப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Administrative operations may be done at the plant: National Green Tribunal grant Permission for Sterlite, ஆலையில் நிர்வாக பணிகள் மேற்கொள்ளலாம்: ஸ்டெர்லைட்டுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி
-=-