சென்னை: மறைந்த நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட கோரி முதல்வர் ஸ்டாலினிடம் விவேக் மனைவி கோரிக்கை மனு கொடுத்து உள்ளார்.

மக்கள் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்டவர் மறைந்த காமெடி நடிகர் விவேக். இயற்கையை போற்றும் வகையில் அப்துல் கலாமின் கனவை நினைவாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வந்தார். அதுதொடர்பாக மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பின்போது, தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடுவதை ஊக்கும்விக்கும் விதமாகவும்  மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும்,  சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்தினார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக்கிற்கு அடுத்த நாள் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தமிழக மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தடுப்பூசிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில், இன்று திடீரென தலைமைச்செயலகம் வந்த மறைந்த திரைப்பட நடிகர் திரு. விவேக் அவர்களின் மனைவி அருட்செல்வி  முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது,  விவேக் அவர்கள் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அளித்தார்.