மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.7 கோடிக்கு மேல் நகை மற்றும் பரிசு பொருட்களை வாங்கியதாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது வழக்கு தொடரப்பட்டது.

டி.டி.வி. தினகரன், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் உள்ளிட்ட பல்வேறு முக்கிய புள்ளிகளை ஏமாற்றி 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர் சுகேஷ் சந்திரசேகர்.

சுகேஷ் சந்திரசேகர் மீதான மோசடி குறித்த விசாரணையின் போது, உயர் ரக கார்கள், விலையுயர்ந்த பைகள், உடைகள், காலணிகள் மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்களை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசாக அளித்தது தெரியவந்தது.

இது தொடர்பாக ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் மேற்கொண்ட விசாரணையில் தன்னை சன் டிவியின் உரிமையாளர் என்றும், சென்னையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தின் உறுப்பினர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்ட சுகேஷ் தனக்கு விதிவிதமான விலையுயர்ந்த பரிசுப்பொருட்களை வழங்கினார் என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17 அன்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெயரும் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கில் இருந்து ஜாமீன் கோரியிருந்த ஜாக்குலின் மனு மீதான விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதில், ஜாக்குலின் பெர்னாண்டஸ்-க்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.