சென்னை: சுவை தாளித்தப் பயிர்களுக்கான மரபணு வங்கி அமைக்க தமிழ்நாடு அரசு  அரசாணை வெளியிட்டது.

மலைப்பிரதேசங்களான  நீலகிரி, கொடைக்கானல்,  கொல்லிமலை, ஏற்காடு, குற்றாலம் மற்றும் ஜவ்வாதுமலை பகுதிகளில் உள்ள தோட்டக் கலை பண்ணைகளில் ரூ.100 லட்சம் நிதியில் “சுவைதாளித்தப் பயிர்களுக்கான” மரபணு வங்கி அமைக்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பாக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது பேசிய வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மிளகு, ஜாதிக்காய், கிராம்பு போன்றவற்றுக்கான மரபணு வங்கி முதற்கட்டமாக இந்தாண்டு நீலகிரி, கொடைக்கானல்,  கொல்லிமலை, ஏற்காடு, குற்றாலம் மற்றும் ஜவ்வாதுமலை பகுதிகளில் உள்ள தோட்டக்கலை பண்ணைகளில் தொடங்கப்பட்டு உள்ளூர் ரகங்கள் அறிமுகப் படுத்தப்படும் என  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அதை   செயல்படுத்தும் வகையில், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் உயர் மதிப்புள்ள “சுவை தாளித்த பயிர்களின் ” முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அதன் ரகங்களை கண்டறிந்து, சேகரித்தல் – பாதுகாத்தல் – உற்பத்தி செய்தல்-விவசாயிகளுக்கு தரமான நடவு செடிகளை விநியோகிப்பது அவசியமாகிறது என்றும்,

அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் மிளகு, ஜாதிக்காய், கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றிற்கான மரபணு வங்கி அமைப்பது முக்கியமானதாகும் என்றும், அதற்காக தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின், பண்ணை வரவின நிதியிலிருந்து ரூ.100 லட்சம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.