தொலைக்காட்சி தொடர்கள், படங்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் ராதிகா சரத்குமார்.

ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கும் அவருக்கு, தொழிற்துறையில் செய்த சாதனைகளுக்காக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விருது அளிக்கப்பட்டது.

தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2022 அன்று நடிகை ராதிகா சரத்குமார் பிரிட்டன் தமிழ்துறை குழுவினருடன் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இதற்கிடையே இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்க நூறு கோடி ரூபாய் (பிரிட்டன் பவுண்டு மதிப்பில் 10 மில்லியன்) தேவைப்படுவதை ராதிகா அறிந்தார். உடனே அப்பணிக்காக, ஒரு லட்ச ரூபாய் நன்கொடைக்கான காசோலையை வழங்கினார்.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்ய நன்கொடை செய்ய விருப்பம் உள்ளோர் www.tamilstudiesuk.org என்ற தளத்திற்கு சென்று அளிக்கலாம்.

தேவைப்படும் தொகையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கை ராதிகா அளித்துள்ளார். இன்னும் 9,999 பேர் தேவை!

தமிழ்நாட்டிலும்… ஏன் உலகம் முழுதும் தமிழர்கள் பலர் பெரும் தொழிலதிபர்களாகவும், பெரும் பணியில் இருப்பவர்களாகவும் உள்ளனர். இவர்களில் 9,999 பேர், தலா ஒரு லட்ச ரூபாய் அளித்தால், இலண்டன் பல்கலையில் தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் துவங்கும்!

– டி.வி.சோமு