நெடுவாசல்,

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக வரும் 7ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என நெடுவாசல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் .

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஜெம் நிறுவனத்துடன், மத்தியஅரசின் பெட்ரோலிய துறை ஒப்பந்தம் செய்தது. இதில் தமிழகத்தில் நெடுவாசல்,  பாண்டிச்சேரி அருகே உள்ள காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து இன்னும் 6மாதங்களில் ஹைட்ரோகார்பன்  எடுக்கும் பணி தொடங்கும் என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது, தமிழக அரசும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடுத்த உறுதிமொழியின் காரணமாக தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது, நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர். அவர்க ளுக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  87 கிராம சபையினரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் வரும் 7ந்தேதி முதல், ஹைட்ரோகார்பன்  திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் மீண்டும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.