டெல்லி: இந்தியாவின் 75வது சுதந்திரன தினம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல இணையதள நிறுவனமான கூகுளும், தன் பங்குக்கு டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  மேலும், கடந்த ஒரு ஆண்டாக அமுதப் பெருவிழா என்ற பெயரில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. சுதந்திர தினத்தினை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது  வீடுதோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

நாட்டின் 75வது சுதந்திரன தினத்தை முன்னிட்டு, பிரபல இணையதளமான கூகுள், டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மிகப்பெரிய உயரங்களைக் குறிக்கும் வகையில் வானத்தில் பறக்கும் பட்டங்களுடன் கூடிய டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் கவுரப்படுத்தி உள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கூகுள் டூடுல் “காத்தாடிகளைச் சுற்றியுள்ள கலாச்சாரத்தை சித்தரிக்கிறது – பிரகாசமான அழகான காத்தாடிகளை உருவாக்கும் கைவினைக் கலை முதல் சமூகம் ஒன்றுசேரும் மகிழ்ச்சியான அனுபவம் வரை. உயரும் காத்தாடிகளால் பிரகாசமான புள்ளிகளுடன் கூடிய பரந்த வானத்தின் பரந்த விரிவாக்கம், நாம் அடைந்த பெரிய உயரங்களின் வண்ணமயமான அடையாளமாகும். GIF அனிமேஷன் ஆற்றல் சேர்க்கிறது மற்றும் டூடுலை உயிர்ப்பிக்கிறது.”