சென்னை: நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். இதையடுத்து, அங்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது.

சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இருவரும் தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருது, சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது போன்றவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் என்ற பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட பாடலுக்கு கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளுடன் கூடிய கண்கவர் நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரி மாணவிகள் நடத்தினர். பின்னர் குல்பாலியா நடனம் (ராஜஸ்தான்), கோலி நடனம் (மகாராஷ்ட்ரா), பாகுரும்பா நடனம் (அசாம்) என பிற மாநிலத்தவரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

குடியரசு தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் பங்கேற்றார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் குடியரசு தின நிகழ்வில் பங்கேற்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.